பரப்பன அக்ரஹாரா கைதிக்கு ஒரு நாள் உணவு செலவு ரூ.85
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரு கைதிக்கு, நாள் ஒன்றுக்கு உணவுக்காக 85 ரூபாய் செலவழிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூரு மத்திய சிறையான பரப்பன அக்ரஹாராவில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 5,000க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் பெங்களூரு ஹலசூரில் வசிக்கும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, கைதிகளுக்கு காபி, டீ உட்பட ஒரு நாள் உணவுக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், சிறைக் கண்காணிப்பாளரிடம் நேற்று முன்தினம் கேட்டிருந்தார்.அந்த கடிதத்திற்கு நேற்று பதில் கிடைத்துள்ளது. ஒரு கைதிக்கு டீ, காபி உட்பட மூன்று நேரத்திற்கும் உணவுக்காக ஒரு நாளைக்கு சராசரியாக 85 ரூபாய் செலவிடப்படுவதாக, சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.