உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவில் சாம்ராஜ் நகர் குடும்பங்கள் மாயம்

வயநாடு நிலச்சரிவில் சாம்ராஜ் நகர் குடும்பங்கள் மாயம்

பெங்களூரு:: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில், சாம்ராஜ் நகரின் இரண்டு குடும்பங்கள் காணாமல் போயுள்ளன. மீட்பு பணிக்காக, கர்நாடக அரசு சார்பில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையிலான மீட்பு குழு, சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அண்டை மாநிலமான கேரளாவின் வயநாட்டில், நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டு, 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மண்ணில் புதைந்ததால், பலி எண்ணிக்கை உயரும் என்று தெரிய வந்துள்ளது.வயநாட்டின் முண்டகை டீ எஸ்டேட் பகுதியில் நடந்த நிலச்சரிவு சம்பவத்தில், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் பகுதியை சேர்ந்த ஜான்சிராணி, இவரது இரண்டரை வயது மகன் நிஹால் ஆகியோர் மாயமாகி உள்ளனர்.இதுபோன்று, சூரல்மல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், சாம்ராஜ்நகர் மாவட்டம், சோம்வார்பேட்டையை சேர்ந்த ரத்னம்மா, ராஜேந்திரா தம்பதியை காணவில்லை. இதனால், இவர்களின் குடும்பத்தினர் பீதியில் உள்ளனர். மேலும் கர்நாடகாவை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் வயநாடு விடுதிகளில் தங்கி இருந்ததாகவும், அவர்களின் நிலை தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.இது குறித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா, டில்லியில் நேற்று கூறியதாவது:வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கர்நாடகா சார்பில் ஆறுதல் தெரிவித்து கொள்கிறோம். மாநில அரசு சார்பில், மீட்பு பணிக்காக ஜே.சி.பி., கிரேன் உட்பட 15 கனரக வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.பெங்களூரு ஹலசூரில் உள்ள எம்.இ.ஜி., மையத்தில் இருந்து, 100 ராணுவ வீரர்கள், 4 அதிகாரிகள், 40 வாகனங்களுடன் மீட்பு பணிக்கு கேரளாவுக்கு சென்றுள்ளனர். பெங்களூரில் இருந்து தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவ குழுக்களை அழைத்து வருவதற்கு, எச்.டி.கோட்டையில் பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வயநாட்டில் கன்னடர்கள் சிக்கி தவிப்பதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மீட்கும் பணியில் அரசு ஈடுபடும்.இவ்வாறு அவர் கூறினார்.மீட்பு பணியை ஒருங்கிணைக்க, கர்நாடக அரசு சார்பில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பி.சி.ஜாப்பர் - 9448355577, திலீஷ் சசி - 9446000514 ஆகியோர் வயநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

2 பெண்கள் பலி

மெப்படி பகுதியில் நடந்த நிலச்சரிவில் சாம்ராஜ் நகரை சேர்ந்த புட்டசித்தி உட்பட இரண்டு பெண்கள் பலியாகி உள்ளதாக அதிகார பூர்வமாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்று, ராஜன் -- ரஜினி என்ற தம்பதியும் காணாமல் போனதாக சாம்ராஜ் நகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.சாம்ராஜ்நகர், மைசூரில் மருத்துவமனைகள் தயார்சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் பலரும் வயநாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அத்தகையோர் காணாமல் போனால், யாருக்காவது தகவல் தெரிந்தால், 08226 223161/63/60 ஆகிய தொலைபேசி எண்களிலும்; 9740942902 என்ற வாட்ஸாப் எண்ணிலும் 24 மணி நேரமும் தகவல் அளிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.இதுபோன்று, மைசூரு கே.ஆர்.மருத்துவமனை, எச்.டி.கோட்டை தாலுகா மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோருக்கு மைசூரு மாவட்ட நிர்வாகம், 0821 24223800 என்ற உதவி எண் அறிவித்துள்ளது.போக்குவரத்துக்கு தடைசாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டை மார்க்கமாக, பெங்களூரில் இருந்து வயநாடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 766 மார்க்கத்தில், முன்னெச்சரிக்கையாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையாக, குண்டுலுபேட்டை - பண்டிப்பூர் - கூடலுர் வழியாக செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.ராகுல் பயணம் ரத்துவயநாடு முன்னாள் எம்.பி.,யாக இருந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறார். டில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம், இன்று காலை 6:30 மணிக்கு புறப்பட்டு, 9:15 மணிக்கு மைசூரு வருகிறார்.இங்கிருந்து கார் மூலம், காலை 9:30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12:30 மணிக்கு வயநாட்டுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை