உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பிரசார திட்டத்தை அறிய முயற்சி அமலாக்க துறை மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தேர்தல் பிரசார திட்டத்தை அறிய முயற்சி அமலாக்க துறை மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடில்லி,:“பா.ஜ.,வின் அரசியல் ஆயுதமாக செயல்படும் அமலாக்க துறை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மொபைல் போன்களில் இருந்து, ஆம் ஆத்மி கட்சியின் லோக்சபா தேர்தல் பிரசார திட்டங்களை அறிய முயற்சி செய்கிறது,” என, டில்லி அமைச்சர் அதிஷி சிங் குற்றம் சாட்டியுள்ளார்.டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையால் கடந்த 21ம் தேதி இரவு கைதுச் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கெஜ்ரிவால் மொபைல் போன்களை ஆய்வு செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை, நீதிமன்றத்தில் கோரியுள்ளது.ஆனால், உண்மையிலேயே கெஜ்ரிவால் மொபைல் போன்களில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்புவது அமலாக்கத் துறை அல்ல; பா.ஜ.,தான் விரும்புகிறது.பா.ஜ.,வின் அரசியல் ஆயுதமாக செயல்படும் அமலாக்கத் துறை பா.ஜ.,வின் விருப்பத்தை நிறைவேற்றத் துடிக்கிறது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படும் மதுபானக் கொள்கை 2021- - 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் இப்போது பயன்படுத்தும் மொபைல் போன்கள் சில மாதங்களுக்கு முன் வாங்கப்பட்டவை.அவரது புதிய மொபைல் போன்களில் 'பாஸ்வேர்டு' வேண்டும் என அமலாக்கத் துறை நெருக்கடி கொடுத்து வருகிறது.அந்த மொபைல் போன்கள் வாயிலாக ஆம் ஆத்மி கட்சியின் லோக்சபா தேர்தல் வியூகம், பிரசாரத் திட்டங்கள், இண்டியா கூட்டணி தலைவர்களுடன் நடந்த உரையாடல்கள் உள்ளிட்ட தகவல்களை பா.ஜ.,வுக்கு வழங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

சலவை இயந்திரம்!

ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ஜாஸ்மின் ஷா கூறியதாவது:அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., ஆகியவற்றை பயன்படுத்தி பா.ஜ., அரசியல் செய்வது வெட்கக்கேடானது. இந்த சர்வாதிகார செயலுக்கு லோக்சபா தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை தங்கள் பக்கம் இழுக்க மிகப்பெரிய அரசியல் சலவை இயந்திரத்தை பா.ஜ., உருவாக்கியுள்ளது. பல ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் அணியைச் சேர்ந்த பிரபுல் படேல், பா.ஜ.,வுடன் இணக்கமாகி விட்டார். இதையடுத்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவை இணைத்தது தொடர்பான முறைகேடு வழக்கில் பிரபுல் படேலுக்கு சி.பி.ஐ., 'க்ளீன் சிட்' வழங்கியுள்ளது.சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை மற்றும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கைப்படி, இந்த விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது; அரசுக்கு 840 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது, பா.ஜ.,வின் அரசியல் சலவை இயந்திரம் வாயிலாக அவர் சுத்தமாகி விட்டார். அதேபோல, சாகன் புஜ்பால் மீதான வழக்கில், கோப்புகளைக் காணவில்லை என, அமலாக்கத் துறை கூறியுள்ளது.அதேநேரத்தில், ஒரு பைசா முறைகேட்டுக்குக் கூட ஆதாரம் இல்லாமல் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை