-அமைச்சர் ராஜினானா செய்ய போராட்டம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்
புதுடில்லி:கலவர வழக்கில் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அமைச்சர் கபில் மிஸ்ரா ராஜினாமா செய்யக் கோரி, சட்டசபையில் போராட்டம் நடத்தியதால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.டில்லி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கிறது.கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று சபை துவங்கியவுடன், சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்தது.மேலும், அக்கட்சியின் எம்.எல்.ஏ., சபை நடுவே திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் குல்தீப் குமார், சஞ்சீவ் ஜா, முகேஷ் அஹ்லாவத், சுரேந்திர குமார், ஜர்னைல் சிங், ஆலே முகமது மற்றும் அனில் ஜா ஆகிய ஏழு பேரை 'சஸ்பெண்ட்' செய்து சபாநாயகர் விஜேந்தர் குப்தா உத்தரவிட்டார். சட்டசபை வளாகத்தில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி சிங், நிருபர்களிடம் கூறியதாவது. டில்லியில் 2020ம் ஆண்டு நடந்த கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், கபில் மிஸ்ரா சுதந்திரமாக வெளியில் இருக்கிறார். கலவரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால், கபில் மிஸ்ரா தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கலவர வழக்கில் தொடர்புள்ளவரை சட்ட அமைச்சராக்கி பா.ஜ., அவரைப் பாதுகாக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் உத்தரவை மீறி சட்டசபை வளாகத்துக்குள் போராட்டத்தைத் தொடருகிறார்களா என பார்க்கும்படி சட்டசபை செயலருக்கு, சபாநாயகர் குப்தா உத்தரவிட்டார்.மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, வடகிழக்கு டில்லியில் 2020ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 53 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்தக் கலவரத்தில் சட்ட அமைச்சர் கபில் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது.