| ADDED : ஜூலை 16, 2024 05:49 AM
பெங்களூரு : ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்காக 'சிக்னல் ஜம்ப்' செய்தால், அபராதம் செலுத்த தேவையில்லை என, பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.பெங்களூரு நகர் போக்குவரத்து பிரிவு இணை போலீஸ் கமிஷனர் அனுசேத் கூறியதாவது:வாகன ஓட்டுனர்கள் பல நேரங்களில், ஆம்புலன்சுக்கு வழி விடும்போது, 'சிக்னல் ஜம்ப்' செய்கின்றனர். இது போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிறது. இதனால் வாகன பயணியர் தேவையின்றி அபராதம் செலுத்த வேண்டி வருகிறது.இனிமேல், இவர்கள் அபராதம் செலுத்த வேண்டியது இல்லை. போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படும். வாகன பயணியர் பிரதான சாலை, சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், ஆய்வு செய்யப்படும்.ஆம்புலன்சுக்கு வழிவிடும் வகையில், சிக்னல் ஜம்ப் செய்த வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்படும். வரும் நாட்களில் அவசர வாகனங்கள் வருவதை கவனித்து, தானாகவே சிக்னல் பச்சை நிறத்துக்கு மாறும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும்.பெங்களூரின், முக்கியமான 10 போக்குவரத்து சிக்னல்களில் ஆம்புலன்ஸ் வருவதை, 100 மீட்டர் தொலைவிலேயே, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டு, சிவப்பு விளக்கை, உடனடியாக பச்சை நிறத்துக்கு மாறும்படி செய்து வருகிறோம். இதனால் வாகனங்கள் நகர்ந்து, வாகனங்கள் சுமுகமாக செல்ல உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.