புதுச்சேரியில் விமான சேவை டிச., 20ல் மீண்டும் துவக்கம்
புதுச்சேரி:புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாதுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவையை, 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் கடந்த மார்ச் 30ம் தேதியுடன் நிறுத்தியது. மீண்டும் விமான சேவையை துவங்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இதற்காக, இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சு நடத்தியது. அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் இருந்து, வரும் 20ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு ஏ.டி.ஆர்., - 72 ரக விமான சேவையை டிச., 20ம் தேதி துவங்குகிறது. இச்சேவை வாரம் முழுக்க இருக்கும்.இந்த விமானம், பெங்களூரில் இருந்து காலை, 11:10 மணிக்கு புறப்பட்டு மதியம், 12:25க்கு புதுச்சேரி வந்தடையும். பின், 12:45 மணிக்கு புறப்பட்டு மதியம், 2:30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். ஹைதராபாதிலிருந்து மதியம், 3:05 மணிக்கு புறப்பட்டு, புதுச்சேரிக்கு மாலை, 4:30 மணிக்கு வந்தடையும். பின், மாலை, 5:10 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு மாலை, 6:35 மணிக்கு சென்றடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.