| ADDED : மார் 28, 2024 10:46 PM
கார்வார் : எம்.பி., அனந்த்குமார் ஹெக்டேயின் ஆதரவு கிடைக்காமல், உத்தர கன்னடா பா.ஜ., வேட்பாளர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி திணறி வருகிறார்.உத்தர கன்னடா தொகுதியில் இருந்து பா.ஜ., சார்பில் ஆறு முறை எம்.பி., ஆனவர் அனந்த்குமார் ஹெக்டே. மத்திய அமைச்சராகவும் இருந்தவர். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், இம்முறை அவருக்கு பா.ஜ., மேலிடம் 'சீட்' மறுத்துள்ளது.கர்நாடக சட்டசபை முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, உத்தர கன்னடா பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் தனக்கு ஆதரவு கேட்பதற்காக, அனந்த்குமார் ஹெக்டேயை, விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அனந்த்குமார் ஹெக்டே வீட்டிற்கு, காகேரி நேரில் சென்றார்.ஆனாலும் தன்னை சந்திக்க அவர் அனுமதிக்கவில்லை. அரைமணி நேரம், வீட்டு வாசலில் காத்து நின்று, ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளார். உத்தர கன்னடாவின் பலமான தலைவரான அனந்த்குமார் ஹெக்டே ஆதரவு இருந்தால் மட்டுமே, காகேரி எளிதில் வெற்றி பெற முடியும். ஆனால் அவரது ஆதரவு கிடைக்காமல் காகேரி திணறி வருகிறார்.