ஹூப்பள்ளி: ''முட்டாள் தனத்தின் மற்றொரு பெயர் சித்தராமையா. முதலில் ஊழலே நடக்கவில்லை என்றார். இப்போது ஒப்புக்கொண்டுள்ளார்,'' என பெலகாவி பா.ஜ., - எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், முறைகேடு நடக்கவே இல்லை என, முதல்வர் சித்தராமையா கூறினார். அதன்பின் நடந்ததாக ஒப்புக்கொண்டார். முட்டாள்தனத்தின் மற்றொரு பெயரே சித்தராமையா. வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில், நாகேந்திரா ராஜினாமா செய்தார். செய்தது என்ன?
மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேட்டில், முதல்வர் சித்தராமையா சிக்கிக்கொண்டார். முந்தைய அரசில் வீட்டுமனை வழங்கப்பட்டதாக கூறுகிறார். இவர் ஆட்சிக்கு வந்து ஓராண்டாக, ஏன் விசாரணை நடத்தவில்லை. பா.ஜ., அரசில் தவறு நடந்திருந்தால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுங்கள். மூடா முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தும் தைரியம் அவருக்கு உள்ளதா.அர்காவதி நில மறு அறிவிப்பு முறைகேட்டை, சி.பி.ஐ., விசாணைக்கு ஒப்படைக்கும்படி கேட்டும் ஒப்படைக்கவில்லை. நான் சாட்சியங்களை அளித்த பின், கெம்பண்ணா கமிஷன் அமைத்தார். கமிஷனும் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையை, சித்தராமையா அரசு சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை. முறைகேட்டில் இவருக்கு தொடர்புள்ளதால், சட்டசபையில் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. காகித புலி
இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப முற்படுகிறார். இவர் தேவையற்ற விதண்டா வாதம் செய்கிறார். விசாரணை அமைப்புகளுக்கு, அமலாக்கத்துறை நெருக்கடி தருவதாக குற்றம் சாட்டுகிறார். இவர் கூறுவதை நம்ப வேண்டுமா. காகித புலி போன்று மிரட்டுகிறார். அரசு மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசு கருவூலத்தில் பணம் இல்லை.வாக்குறுதி திட்டங்கள் விஷயத்தில், அரசிடம் ஏகப்பட்ட குழப்பம் உள்ளது. பசவராஜ ராயரெட்டியே இதை கூறுகிறார். பா.ஜ., அரசில் நடந்த பணிகளே இப்போதும் நடக்கின்றன. முதல்வர் மீது எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.