கோவிலில் சத்தியம் செய்ய தயாரா? அமைச்சர் பைரதி சுரேஷ் சவால்!
மைசூரு: ''முடா வழக்கில் சித்தராமையா தவறு செய்தார் என்று, கோவிலில் சத்தியம் செய்ய தயாரா,'' என்று, பா.ஜ., தலைவர்களுக்கு, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ் சவால் விடுத்து உள்ளார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:முடாவில் இருந்து முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளும் சட்டவிரோதமாக வாங்கி கொடுக்கவில்லை என்று நாங்கள் முன்பு இருந்தே கூறுகிறோம்.லோக் ஆயுக்தா அறிக்கையும் அதையே தான் கூறி உள்ளது. சித்தராமையா தவறு செய்தார் என்று, மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் சத்தியம் செய்ய தயாரா என்று, பா.ஜ., தலைவர்களுக்கு முன்கூட்டியே சவால் விடுத்தேன். இப்போதும் அதே சவாலை திரும்ப விடுக்கிறேன்; சத்தியம் செய்ய ரெடியா.லோக் ஆயுக்தா அறிக்கையை விமர்சிக்கும் பா.ஜ., தலைவர்களுக்கு மானம், மரியாதை, கண்ணியம் இல்லை. மாநில மக்களுக்கு இப்போது உண்மை தெரிந்து விட்டது.சித்தராமையா தன் அரசியல் வாழ்க்கையில் சட்டவிரோதமாக எதையும் செய்தது இல்லை. அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த பா.ஜ., பாதயாத்திரை நடத்தியது.முடாவில் 50 க்கு 50 திட்டத்தின் கீழ் வீட்டுமனைகள் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு பற்றி, நீதிபதி தேசாய் கமிஷன் விசாரிக்கிறது. விசாரணை முடிந்ததும் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுப்போம்.பா.ஜ., ஆட்சியில் தான் 50க்கு 50 திட்டத்தின் கீழ் அதிக வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. முதல்வர், அமைச்சர்கள் தவறு செய்தால் அவர்களை லோக் ஆயுக்தா சிறைக்கு அனுப்பிய உதாரணமும் உண்டு.முடா அலுவலகத்தில் இருந்து, ஆவணங்களை நான் திருடி சென்றதாக பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.அரசு ஆவணங்களை திருடுவதாக எளிதான விஷயமா. முடாவில் இருந்த 141 ஆவணங்களை காணவில்லை என்று, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.இத்தனை ஆவணங்கள் மாயமானது என்று அவர்களுக்கு கூறியது யார். இதை கூறியவரே அந்த ஆவணங்களை எடுத்து சென்று இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.