உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியின் அடுத்த முதல்வர் ஆதிஷி மர்லினா சிங் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லியின் அடுத்த முதல்வர் ஆதிஷி மர்லினா சிங் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பதவி விலகியதை அடுத்து, புதிய முதல்வராக, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர் ஆதிஷி மர்லினா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி தலைவரும், முதல்வராக இருந்தவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இருப்பினும், முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது; முதல்வருக்கான கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டன. இதனால், முதல்வர் பதவியில் தொடர முடியாத நெருக்கடியான சூழல் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது; இது, மக்கள் மத்தியில், தன் செல்வாக்கு மற்றும் கட்சியின் செல்வாக்கை பாதிக்கும் என்று கருதி, முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய கெஜ்ரிவால் முடிவெடுத்தார்.கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், டில்லி சட்டசபைக்கு மஹாராஷ்டிராவுடன் சேர்த்து, முன் கூட்டியே தேர்தல் நடத்த பரிந்துரைக்கப் போவதாகவும் கூறியிருந்தார். அடுத்த தேர்தலில் மக்கள் ஓட்டளித்தால் மட்டுமே, மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன் என்றும் கூறியிருந்தார். இதனால் டில்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில் மூத்த தலைவர் திலீப் பாண்டே, ''புதிய முதல்வர் யார் என்பது குறித்து கெஜ்ரிவால் அறிவிப்பார்,'' என்றார். இதன்பின், கெஜ்ரிவால் எழுந்து, மூத்த அமைச்சரான ஆதிஷி பெயரை முன்மொழிவதாக அறிவித்தார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து நின்று கைதட்டி வழிமொழிந்து, ஒருமனதாக ஆதிஷியை சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்தனர். இதை தொடர்ந்து, டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவை, அவரது அலுவலகத்தில் நேற்று மதியம் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.டில்லியில், மூன்றாவது முறையாக பெண் ஒருவர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முன், காங்கிரசை சேர்ந்த ஷீலா தீட்ஷித், பா.ஜ.,வைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் டில்லி முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ளனர். அவர்கள் வரிசையில், தற்போது, 11 ஆண்டுகளுக்கு பின், முதல்வர் பதவியில் மீண்டும் ஒரு பெண் அமர உள்ளார். தற்போது மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கும் நிலையில், இரண்டாவதாக ஆதிஷி உள்ளார். ஆம் ஆத்மி அதிருப்தியாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஸ்வாதி மாலிவால், ஆதிஷி குறித்து நேற்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதை கடுமையாக விமர்சித்துள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், 'நாங்கள் கொடுத்த எம்.பி., பதவியை ராஜினாமா செய்து விட்டு, அதற்கு பின் எங்களை ஸ்வாதி விமர்சிக்கலாம்' என்றனர். முதன் முறையாக அரசியலுக்கு வந்தவுடன், இத்தனை பெரிய பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளெல்லாம் ஆம் ஆத்மி கட்சியில் மட்டுமே நடக்கும். நான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் கவலையாகவும் உள்ளது. என் மூத்த சகோதரர் கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். டில்லி மக்களின் மனங்களில் முதல்வராக என்றைக்குமே அரவிந்த் கெஜ்ரிவால் தான் நீடித்திருப்பார். நான் அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே முதல்வராக நீடிப்பேன். ஆதிஷிடில்லி முதல்வர் தேர்வு

சுறுசுறுப்புக்கு கிடைத்த பரிசு!

தற்போதைய டில்லி அமைச்சரவையில் நீர், பொதுப்பணித்துறை, திட்டமிடல், மின்சாரம், கல்வி, உயர் கல்வி, சேவைகள், விழிப்புணர்வு மற்றும் மக்கள் தொடர்பு என, 11க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளை ஆதிஷி கவனித்து வருகிறார். இத்தனைக்கும் இவர், கடந்த ஆண்டுதான் அமைச்சராக பதவியேற்றார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது, அவருக்கு பதிலாக ஆட்சி நிர்வாகத்தை ஆதிஷி சுறுசுறுப்புடனும், கவனத்துடனும் கையாண்டது, மூத்த தலைவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2013ல் தான், ஆம் ஆத்மி கட்சியில் ஆதிஷி இணைந்தார். கட்சியின் கொள்கைகளை வகுப்பதில், இவர் முக்கிய பங்காற்றினார். டில்லியில் கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.கடந்த 2015ல், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக ஆதிஷி நியமிக்கப்பட்டார். அதிலிருந்து கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் மள மளவென கொண்டுவரப்பட்டன; இதற்கு ஆதிஷியே காரணம். டில்லியின் கல்காஜி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிஷிக்கு, வயது 43. மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் கெஜ்ரிவால் சிறைக்கு சென்ற பின், ஊடகங்கள் மத்தியில் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி கூறியதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆசிரியர் டூ முதல்வர்

1981 ஜூன் 8: டில்லியில் ஆதிஷி பிறந்தார்* இவரது பெற்றோர் ஆசிரியர்கள். * லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் எம்.ஏ., வரலாறு பட்டம் பெற்றார். * ம.பி.,யில் இயற்கை விவசாயம், ஆந்திராவில் ஆசிரியராக பணியாற்றினார். 2013 : ஆம் ஆத்மியில் இணைந்தார். கட்சியின் செய்தி தொடர்பாளர். 2019: டில்லி கிழக்கு லோக்சபா தொகுதியில் பா.ஜ.,வின் காம்பிரிடம் தோல்வி. 2020 பிப்., 12: முதன்முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு. 2023 மார்ச் 9: கல்வி, பெண்கள் குழந்தைகள் நலம், கலாசாரம், சுற்றுலா, பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்பு. 2024 ஜூன் 21: டில்லிக்கு ஹரியானா அரசு தண்ணீர் திறக்க கோரி உண்ணாவிரதம். 2024 செப்., 17: டில்லி முதல்வராக ஆதிஷி 43, தேர்வு. தற்போதைய நிலையில் நாட்டின் இளம் முதல்வர்.

ஆசிரியர் டூ முதல்வர்

1981 ஜூன் 8: டில்லியில் ஆதிஷி பிறந்தார்* இவரது பெற்றோர் ஆசிரியர்கள். * லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் எம்.ஏ., வரலாறு பட்டம் பெற்றார். * ம.பி.,யில் இயற்கை விவசாயம், ஆந்திராவில் ஆசிரியராக பணியாற்றினார். 2013 : ஆம் ஆத்மியில் இணைந்தார். கட்சியின் செய்தி தொடர்பாளர். 2019: டில்லி கிழக்கு லோக்சபா தொகுதியில் பா.ஜ.,வின் காம்பிரிடம் தோல்வி. 2020 பிப்., 12: முதன்முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு. 2023 மார்ச் 9: கல்வி, பெண்கள் குழந்தைகள் நலம், கலாசாரம், சுற்றுலா, பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்பு. 2024 ஜூன் 21: டில்லிக்கு ஹரியானா அரசு தண்ணீர் திறக்க கோரி உண்ணாவிரதம். 2024 செப்., 17: டில்லி முதல்வராக ஆதிஷி 43, தேர்வு. தற்போதைய நிலையில் நாட்டின் இளம் முதல்வர். பொம்மை முதல்வர்பா.ஜ., கிண்டல்முதல்வராக ஆதிஷி தேர்வு செய்யப்பட்டது குறித்து, டில்லி மாநில பா.ஜ., தலைவரான விரேந்திர சச்தேவா கூறியதாவது:ஆதிஷியை அரவிந்த் கெஜ்ரிவால் நியமனம் செய்துள்ளாரே தவிர, அவர் முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை. மணீஷ் சிசோடியாவின் நெருக்கடி காரணமாகவே ஆதிஷி முதல்வராக்கப்பட்டுள்ளார். உண்மையில் இவரை முதல்வராக்குவதில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விருப்பமில்லை. தற்போது, டில்லி அரசின் தலைமை முகம் மாறி இருக்கிறது. இருந்தாலும், ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் நீடிக்கும். இவர், ஒரு பொம்மை முதல்வராகவே இந்த பதவியில் நீடிப்பார். இவ்வாறு அவர் கூறினார். -- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி