உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேச வன்முறை: தாயகம் திரும்பிய 400 இந்தியர்கள்

வங்கதேச வன்முறை: தாயகம் திரும்பிய 400 இந்தியர்கள்

புதுடில்லி, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில் இருந்து, 'ஏர் இந்தியா, இண்டிகோ' ஆகிய நிறுவனங்களின் சிறப்பு விமானங்களில், 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அந்நாட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நம் நாட்டுக்கு தப்பி ஓடி வந்தார்.போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, போலீசார், மாணவர்கள் உட்பட, 400 பேர் கொல்லப்பட்டனர். வங்கதேசத்தில், மாணவர்கள் உட்பட, 19,000 இந்தியர்கள் வசித்த நிலையில், போராட்டத்துக்கு முன்னதாகவே, பலர் தாயகம் திரும்பினர். வங்கதேச கலவரத்தை அடுத்து, இந்தியா - வங்கதேசம் இடையேயான ரயில், பஸ் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், டாக்காவுக்கு விமானத்தை இயக்குவதில் உட்கட்டமைப்பு சவால்கள் இருந்த போதும், எந்தவொரு பயணியரும் இல்லாமல், தலைநகர் டில்லியில் இருந்து, டாக்காவுக்கு, ஏர் இந்தியா சிறப்பு விமானம், சமீபத்தில் புறப்பட்டது. இந்த விமானத்தில், ஆறு கைக்குழந்தைகள் உட்பட 205 பேர், டில்லிக்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டனர். இதேபோல், டாக்காவில் இருந்து மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவுக்கு வந்த இண்டிகோ சிறப்பு விமானத்தில், 200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். இந்தியா - வங்கதேசம் இடையேயான விமான சேவை, வழக்கம் போல் செயல்பட திட்டமிடப்பட்டு உள்ளதாக, விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.இதற்கிடையே, டாக்காவில் உள்ள இந்திய துாதரகத்தில் பணியாற்றும் கூடுதல் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், சிறப்பு விமானங்களில், இந்தியாவுக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். எனினும், வழக்கம் போல் இந்திய துாதரகம் செயல்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை