பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராவது குறித்து, முக்கிய பிரமுகர்களுடன் இன்று முதல் மூன்று நாட்கள், துணை முதல்வர் சிவகுமார் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.பெங்களூரு, துமகூரு, ஷிவமொகா, மைசூரு ஆகிய நான்கு மாநகராட்சிகள் உட்பட வெவ்வேறு உள்ளாட்சிகளுக்கு இன்னமும் தேர்தல் நடக்காமல் உள்ளது. சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் முடிந்த பின், பார்த்து கொள்ளலாம் என்று முந்தைய பா.ஜ., அரசும், தற்போதைய காங்கிரஸ் அரசும் கருதியது. காங்கிரஸ் நெருக்கடி
சட்டசபை, லோக்சபா என இரண்டு தேர்தல்களும் முடிந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தும்படி, அரசுக்கு காங்கிரஸ் கட்சியினரே நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதன்படி, முதல் கட்டமாக பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்த, அரசு தீர்மானம் செய்துள்ளது.தேர்தல் நடத்துவதற்கு தடையாக உள்ள விஷயங்கள் குறித்து, சில நாட்களுக்கு முன், பெங்களூரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.அப்போது, 225 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தலாமா அல்லது ஐந்து பாகங்களாக பிரித்து தேர்தல் நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் மீண்டும் ஆலோசனை நடத்தி, ஜூலையில் நடக்க உள்ள மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரில் சட்ட திருத்தம் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது.அக்டோபருக்குள் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யும்படி, ஆளுங்கட்சி தரப்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆளுங்கட்சி தரப்பு
இந்நிலையில், பெங்களூரு வளர்ச்சி துறையை நிர்வகிக்கும் துணை முதல்வர் சிவகுமார், பெங்., மாநகராட்சி தேர்தலுக்கு தயாராவது குறித்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.சட்டசபை, லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள், முன்னாள் மேயர்கள், பிளாக் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட மூத்த பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி சில உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார். பெங்., தெற்கு, பெங்., சென்ட்ரல், பெங்., வடக்கு என மூன்று நாட்கள் தனி தனியாக பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.