| ADDED : மார் 23, 2024 06:49 AM
பெங்களூரு: ''பிரதமர் நரேந்திர மோடி அரசின் திட்டங்களை, தான் செய்ததாக காங்கிரஸ் அரசு தொடர்ந்து பொய் சொல்லி கொண்டே இருக்கிறது. அளித்த வாக்குறுதிப்படி செயல்படவில்லை,'' என பா.ஜ., - எம்.எல்.சி., பாரதி ஷெட்டி குற்றம் சாட்டினார்.லோக்சபா தேர்தலை ஒட்டி, பா.ஜ., சார்பில் தினமும் ஒரு தலைவர், செய்தியாளர்களை சந்தித்து, மத்திய அரசின் சாதனைகள் குறித்தும், மாநில அரசின் தோல்விகள் குறித்தும் விளக்க வேண்டும் என அக்கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, பா.ஜ., - எம்.எல்.சி., பாரதி ஷெட்டி நேற்று கூறியதாவது:பெங்களூரில் தண்ணீருக்காக ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் டேங்கர் மாபியா நடக்கிறது. அரசு நிர்ணயித்த விலைக்கு டேங்கர் தண்ணீர் வினியோகிப்பதில்லை. டேங்கர் உரிமையாளர்கள் அரசின் பேச்சை கேட்பதில்லை.அரசு வழங்கும் நிவாரண நிதிக்காக, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக அமைச்சரே கூறுகிறார். அவர் விவசாயிகளின் விரோதி. மத்திய பா.ஜ., அரசின் திட்டங்களை, தன்னுடைய திட்டங்கள் என்று மாநில காங்கிரஸ் அரசு சொல்லி கொண்டு விளம்பரம் தேடுகிறது.பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் கீழ், 4 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்டவை. ஆனால், காங்கிரஸ் அரசு செய்ததாக சொல்கின்றனர்.வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றாமல், சொன்னதை செய்து விட்டோம் என்று கூறுகின்றனர். அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த இந்த அரசு பெரும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளது.மத்திய அரசின் சோலார் பேனல் திட்டத்திற்கு, மாநில அரசு ஒரு பைசா கூட தரவில்லை. ஆனால், தாங்கள் தான் திட்டத்தை நிறைவேற்றியது போல் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்கின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி அரசின் திட்டங்களை தான் செய்ததாக காங்கிரஸ் அரசு தொடர்ந்து பொய் சொல்லி கொண்டே இருக்கிறது.இவ்வாறு அவர்கூறினார்.