| ADDED : மே 23, 2024 10:13 PM
ஹிந்துக்களின் 500 ஆண்டு கனவாக இருந்த, அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டது. அதன்பின்னர் நாடு முழுதும் உள்ள ராமர் கோவில்களுக்கு மவுசு அதிகரித்து உள்ளது. ராமர் கோவில் எங்கு உள்ளது என்று, பக்தர்கள் தேடி, தேடி சென்று, ராமரை தரிசனம் செய்கின்றனர்.கர்நாடகாவின் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமான, விஜயநகராவில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் பற்றிய விபரம் வருமாறு:விஜயநகராவின் ஹம்பியில் இருந்து, 6 கி.மீ.,யில் உள்ளது கமலாபுரா. இங்கு விஜயநகர பேரரசர் காலத்தில் கட்டப்பட்ட பட்டாபிராமா கோவில் உள்ளது. இந்த கோவில், கடவுள் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும், இக்கோவிலில் பிரதான கோவில் அமைப்பில் அச்சு மண்டபங்கள் உள்ளன.கோவிலின் துாண்கள் சிக்கலான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் அந்த வடிவமைப்பு, பக்தர்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளது. கோவில் வளாகத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு கோபுரங்களும் அமைந்து உள்ளன. பட்டாபிராமா கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் தனி அழகை வெளிப்படுத்துவதாக கூறி மெய்சிலிர்க்கின்றனர். கோவிலை சுற்றி நிலவும் அமைதியான சூழல், கட்டட கலை, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது.தினமும் காலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, கோவில் நடை திறந்திருக்கும். கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க தடை இல்லாததால், பக்தர்கள் உற்சாகமாக 'செல்பி 'எடுக்கின்றனர். பெங்களூரில் இருந்து கமலாபுரா 387 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. பஸ்சில் செல்பவர்கள் ஹம்பி சென்று அங்கிருந்து கமலாபுரா செல்லலாம். ரயிலில் சென்றால் ஹொஸ்பேட்டில் இறங்கி, அங்கிருந்து செல்ல வேண்டும்- நமது நிருபர் -