| ADDED : ஜூன் 08, 2024 04:48 AM
ஹூப்பள்ளி : உத்தரகண்ட், சஹஸ்தரதாலில் மலையேற்றத்துக்குச் சென்று, வானிலையால் கர்நாடகாவை சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதில் ஹூப்பள்ளியை சேர்ந்த தம்பதியும் அடங்குவர். இவர்கள் பிறந்ததும், இறந்ததும் ஒரே நாள்.ஹூப்பள்ளியைச் சேர்ந்தவர் விநாயகா முங்கரவாடி, 55. இவரது மனைவி சுஜாதா, 52. பொறியியல் பட்டதாரிகளான தம்பதி, பிழைப்புக்காக பெங்களூரு வந்தனர். அறக்கட்டளை அமைத்த இவர்கள், சமூக சேவையிலும் ஈடுபட்டனர்.ஆண்டுதோறும் மலையேற்றத்துக்குச் செல்வது, இவர்கள் வழக்கம். இம்முறை உத்தரகண்டின், சஹஸ்தரதால் மலைக்குச் சென்றனர். இம்முறை பிள்ளைகளையும், மலையேற்றத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். ஆனால் இரண்டு டிக்கெட் மட்டும் கிடைத்ததால், தம்பதி உட்பட, 22 பேர் மலையேற்றத்துக்குச் சென்றனர்.மலையேற்றத்தை முடித்துக் கொண்டு, திரும்பும் போது பனி மூட்டத்தால் பாதை தென்படவில்லை. எனவே பனி குறைந்த பின், கீழே இறங்கி முகாமுக்கு செல்லலாம் என, காத்திருந்தனர். ஆனால் அளவுக்கு அதிகமான குளிர், பனிமூட்டத்தால் ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். இவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 12 பேர் மருத்துவமனையில் உள்ளனர். சிலர் ஆரோக்கியமாக திரும்பினர்.இத்தம்பதி பிறந்த தேதியும் ஒன்றே. இறந்ததும் ஒரே நாளில் என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகா 1969 அக்டோபர் 10ம் தேதியும், அவரது மனைவி சுஜாதா 1972 அக்டோபர் 10ம் தேதியும் பிறந்தனர். இருவரும் ஒரே நாளில் இறந்தனர்.