பெங்களூரு,: கர்நாடக மேலவை தேர்தலில், ஐந்து தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டனர். தற்போதைய இரண்டு எம்.எல்.சி.,களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.கர்நாடக மேலவையின் வட கிழக்கு பட்டதாரி தொகுதி காங்கிரஸ் - எம்.எல்.சி., சந்திரசேகர் பாட்டீல்; பெங்களூரு பட்டதாரி தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி., ஏ.தேவகவுடா; கர்நாடக தென் கிழக்கு ஆசிரியர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி., ஒய்.ஏ.நாராயணசாமி; கர்நாடக தென் மேற்கு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.சி., போஜேகவுடா ஆகியோரின் பதவிக் காலம் அடுத்த மாதம் 21ம் தேதி நிறைவு பெறுகிறது.மேலும், கர்நாடக தென் மேற்கு பட்டதாரி தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்த ஆயனுார் மஞ்சுநாத், 2023 ஏப்ரல் 19ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோன்று, கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.சி.,யாக இருந்த மரிதிப்பே கவுடா, கடந்த மார்ச் 21ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். மனு தாக்கல்
மேற்கண்ட ஆறு எம்.எல்.சி., பதவிகளுக்கு, ஜூன் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல், இம்மாதம் 9ம் தேதி துவங்கியது. மனுத் தாக்கலுக்கு வரும் 16ம் தேதி கடைசி நாள். 17ம் தேதி மனுக்கள் பரிசீலனை. மனுக்கள் திரும்பப் பெறுவதற்கு, 20ம் தேதி கடைசி நாள்.ஜூன் 3ம் தேதி காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். ஜூன் 6ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.லோக்சபா தேர்தல் போன்று, மேலவை தேர்தலிலும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பா.ஜ., போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.இதன்படி, வட கிழக்கு பட்டதாரி தொகுதிக்கு அமர்நாத் பாட்டீல்; தென் மேற்கு பட்டதாரி தொகுதிக்கு தனஞ்செயா சார்ஜி; பெங்களூரு பட்டதாரி தொகுதிக்கு தற்போதைய எம்.எல்.சி., ஏ.தேவகவுடா; தென் கிழக்கு ஆசிரியர் தொகுதிக்கு தற்போதைய எம்.எல்.சி., ஒய்.ஏ.நாராயணசாமி; தெற்கு ஆசிரியர் தொகுதிக்கு நிங்கராஜு ஆகியோரை வேட்பாளர்களாக பா.ஜ., அறிவித்துள்ளது. ம.ஜ.த.,வுக்கு ஒரு இடம்
மீதி உள்ள தென் மேற்கு ஆசிரியர் தொகுதியில் ம.ஜ.த.,வின் போஜேகவுடா, தற்போது எம்.எல்.சி.,யாக இருப்பதால், அந்த கட்சிக்கு தொகுதியை விட்டுக் கொடுப்பதற்கு பா.ஜ., முடிவு செய்துள்ளது.