புதுடில்லி : லோக்சபா தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால், ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், பிரிவினையைத் தூண்டும் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி நேற்று கூறியுள்ளதாவது: மக்களின் பெரும் ஆதரவுடன், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயககக் கூட்டணி, லோக்சபா தேர்தலை சந்தித்து வருகிறது.ஆனால், தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ளும், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி கட்சிகள், எதிர்மறையான விமர்சனங்களால் அரசியல் தற்கொலையில் ஈடுபட்டுள்ளன.தங்களுடைய தோல்வி நிச்சயம் என்பதால், இந்தக் கூட்டணியினர், மக்களை பிளவுபடுத்தும் வகையில், பிரிவினை அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தலைவர்கள் கூறிவரும் கருத்துக்களை பார்க்கும்போது, வேறு யாரோ ஒருவருடைய தூண்டுதல் இருப்பது தெளிவாகிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கு மோடி அரசு எதுவுமே செய்யவில்லை என்று பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மக்களிடம் இருந்து உண்மை தகவல்களை மறைக்கப் பார்க்கிறார்.காங்கிரசைச் சேர்ந்த, கர்நாடக அமைச்சர் சிவராஜ் தங்கடாகி, மோடியின் பெயரைக் கூறும் இளைஞர்களின் கன்னத்தில் அறைய வேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார்.அந்தக் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாதே, ஹிமாச்சல பிரதேசத்தில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளரான, பிரபல நடிகை கங்கனா ரனாவத் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அதை உடனடியாக நீக்கியுள்ளார். வேறு யாரோ தன்னுடைய சமூக வலைதளக் கணக்கில் இருந்து அனுப்பியதாக கூறுகிறார்.இதில் இருந்து, காங்கிரசின் இணையதளங்கள், சமூக வலைதளங்களின் கட்டுப்பாடு அவர்களிடம் இல்லை என்பது தெளிவாகிறது.'பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஹிந்த்' ஆகியவை, முஸ்லிம்களால் கூறப்பட்ட கோஷம் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.இவ்வாறு இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும், மக்களிடையே பிரிவினையையும், மோதலையும், வன்முறையையும் தூண்டி விடும் வகையில் பேசுகின்றன. இதனால், இந்தக் கட்சிகளிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.