கவர்னர் மாளிகையுடன் பா.ஜ., அரசு சுமூக உறவு
விக்ரம்நகர்:'கவர்னர் மாளிகையுடன் புதிய பா.ஜ., அரசு சுமூகமான உறவை மேற்கொள்ளும்' என, மாநில கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.டில்லியில் 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, துணைநிலை கவர்னர் மாளிகையுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தது. அதிலும் 2022 மே மாதத்தில் துணைநிலை கவர்னராக வி.கே. சக்சேனா பொறுப்பேற்ற பிறகு, சுகாதாரப் பிரச்னைகள், யமுனை மாசுபாடு, உள்கட்டமைப்பு, கொள்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கடும் மோதல்களை ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டது.பல்வேறு கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்க முடியாமல் ஆம் ஆத்மி அரசு தவித்ததாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.சர்ச்சைக்குரிய மதுபான கொள்கையை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்தது. துணைநிலை கவர்னர் தலையிட்டதை அடுத்து, அந்த கொள்கையை அரசு திரும்பப் பெற்றது.பல்வேறு சர்ச்சைக்குரிய முடிவுகளை துணைநிலை கவர்னர் கண்டித்து, அரசை ஒழுங்குபடுத்தும் தன் கடமையை நிறைவேற்றினார். ஆனால் இதை ஆம் ஆத்மி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.இதனால் மாநில அரசுக்கும் துணைநிலை கவர்னர் மாளிகைக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நீடித்து வந்தது.இதுபோன்ற நிலையை தவிர்க்கவும் சுமூகமான உறவை மேம்படுத்தவும் மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கவும் பா.ஜ.,வை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும்படி, சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது அக்கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.அதன்படி, தற்போது முதல்வர் ரேகா தலைமையில் புதிதாக பா.ஜ., அரசு பதவியேற்றுள்ளது. இதுகுறித்து மாநில பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:டில்லி மக்கள் எதிர்பார்ப்பை மாநில பா.ஜ., அரசு நிறைவேற்றும். துணைநிலை கவர்னருடன் எந்த விதமான சர்ச்சையோ மோதலோ பா.ஜ., அரசு உருவாக்காது.கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை. 26 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கவர்னர் மாளிகையுடனான உறவு மேம்படும். சுமூகமான நிர்வாகத்திற்கு இது வழி வகுக்கும்.துணை நிலை கவர்னருடன் புதிய அரசு இணைந்து செயல்படுவது மட்டுமல்லாமல், அரசியலமைப்பு அலுவலகத்திற்கு தேவையான கண்ணியத்தையும் கொடுக்கும். இது ஆம் ஆத்மி கட்சியால் கடுமையாக புறக்கணிக்கப்பட்டது என்பதே உண்மை.மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சியில் இருப்பதால், எந்த 'ஈகோ'வும் இருக்காது. ஆட்சி மற்றும் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் பெரிய மாற்றங்களை காண வாய்ப்புள்ளது.பல்வேறு துறைகளில் டில்லியை மேம்படுத்தும் முக்கிய பணி காத்திருக்கிறது.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.