பெங்களூரு : ''டெங்கு கொசுக்களை விட வேகமாக, பா.ஜ.,வினர் பொய்களை பரப்புகின்றனர்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பதிலடி கொடுத்தார்.சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், இரண்டு நாட்களுக்கு முன்பு, தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் நீச்சல் குளத்தில் நீந்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இந்த வீடியோவை வெளியிட்ட பா.ஜ., கிண்டல் செய்தது. 'மக்கள் டெங்குவால் அவதிப்படுகின்றனர். இதைத் தடுக்க வேண்டிய சுகாதார அமைச்சர், நீச்சல் குளத்தில் நீச்சலடித்து குஷியாக காலம் கடத்துகிறார்' என குற்றம் சாட்டியது.பா.ஜ.,வுக்கு பதிலடி கொடுத்து, பெங்களூரில் நேற்று அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:பா.ஜ.,வினருக்கு வேறு வேலையே இல்லை. நீச்சல் என்பது ஒரு நல்ல பழக்கம். வாக்கிங், ஜாக்கிங் போன்று, நீச்சலும் கூட ஆரோக்கிய மேம்பாட்டுக்கான உடற்பயிற்சி தான். பா.ஜ.,வினர் சொகுசு விடுதிக்கு சென்று நீச்சலடிக்கவில்லையா?நான் நீச்சலடித்த பின், மருத்துமனைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, என் பணிகளை செய்தேன். பா.ஜ., தலைவர்கள் தேவையின்றி, பொய்களை பரப்புகின்றனர். டெங்கு கொசுக்களை விட, இவர்கள் வேகமாக பொய்களை பரப்புகின்றனர். ஆலோசனை
பா.ஜ.,வினருக்கு 'மஜா', 'ஜாலி' என்றே பேசி பழக்கமாகிவிட்டது. நேற்று முன்தினம் நெலமங்களா அருகில், மதுபானத்துடன் விருந்து கொடுத்தனர். இது பற்றி நான் பேசினேனா? மாநகராட்சிக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் நீச்சலடிப்பதில் தவறென்ன?கர்நாடகாவில் டெங்கு சூழ்நிலை, பயப்படும்படி இல்லை. டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் பட்டியலை வெளியிடுவோம். சில இடங்களில் 'ஜிகா' தொற்றும் தென்படுகிறது. தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டியுடனும், ஆலோசனை நடத்தினேன். விழிப்புணர்வு
'மெடிக்கல் எமர்ஜென்சி' அறிவிக்கும்படி, சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். சூழ்நிலை கையை மீறவில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். டெங்கு விஷயத்தில், யாரும் அரசியல் செய்யக்கூடாது. எதிர்க்கட்சி தலைவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.எங்கோ சென்று, ஏதேதோ பேசுவது சரியல்ல. பா.ஜ., - எம்.பி. மஞ்சுநாத்திடமும் பேசியுள்ளேன். அவரும் சில ஆலோசனைகள் கூறினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட பலர் மனம் போனபடி பேசுகின்றனர். விளம்பரத்துக்காக ஏதேதோ பேசுவது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.சில மருத்துவமனைகளில், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும். மருந்துகள் வாங்க, மருத்துவ பரிசோதனைக்கு தனியாக நிதியுதவி வழங்க வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சர், பெங்களூரில் மட்டுமே இருக்கக் கூடாது. அனைத்து மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளுக்குச் சென்று, சூழ்நிலையை ஆய்வு செய்ய வேண்டும். கிராமப் பகுதிகளில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். டெங்கு உயிர்க்கொல்லி நோய். இதை கட்டுப்படுத்தா விட்டால், பொதுமக்கள் பாதிப்படைவர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். - அரவிந்த் பெல்லத், எதிர்க்கட்சி துணைத் தலைவர், சட்டசபை