ஹோலிக்கு பிரேக்: பா.ஜ., மேயருக்கு எதிர்ப்பு
பாட்னா, பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, சமீபத்தில் பிஸ்பி தொகுதியின் பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிபூசன் தாக்கூர், 'ஹிந்துக்களை ஹோலி கொண்டாட முஸ்லிம்கள் அனுமதிக்க வேண்டும்; அவர்கள் மீது வண்ணப்பொடிகள் துாவினால் கோபப்படக்கூடாது. 'ஏதேனும், பிரச்னை எழுந்தால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்' என, குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல், தர்பங்கா நகரின் மேயராக உள்ள பா.ஜ.,வைச் சேர்ந்த அஞ்சும் அரா தெரிவித்த கருத்தும் விவாதத்திற்குள்ளாகி உள்ளது. சமீபத்தில் தர்பங்கா நகரில் அமைதி குழு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று அஞ்சும் அரா பேசியதாவது:இந்த ஆண்டு, ஹோலி பண்டிகை, வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானையொட்டி அவர்களும் நோன்பு இருந்து தொழுகை நடத்துவர். முஸ்லிம்களின் தொழுகை நேரத்தை நீட்டிக்க முடியாது. எனவே, ஹோலி கொண்டாட்டத்தை, தொழுகை நேரமான மதியம் 12:30 மணி முதல் 2:00 மணி வரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். முஸ்லிம்கள் எவ்வித இடையூறுமின்றி தொழுகை நடத்துவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இவரது பேச்சுக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிபூசன் தாக்கூர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “ஹோலி கொண்டாட்டத்திற்கு ஒருபோதும் தடை விதிக்க முடியாது. பெண் மேயரின் குடும்ப பின்புலத்தைப் பற்றி எங்களுக்கு தெரியும். அவரால், ஹோலியை எப்படி நிறுத்த முடியும்?,” என்றார்.