ஓட்டு மையத்தில் கேமரா காட்சிகள் மாயம்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
பெங்களூரு : மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வெற்றிக்கு எதிரான வழக்கில், ஓட்டு எண்ணிக்கை மையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் காணாமல் போன விவகாரம் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கோலார் மாவட்டம், மாலுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், 248 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 'ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்து உள்ளது. இதனால் நஞ்சேகவுடா வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாலுார் தொகுதியில் அவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, மஞ்சுநாத் கவுடா என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் நடக்கிறது. முந்தைய விசாரணையின்போது, 'ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.இதையடுத்து, கோலார் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அக்ரம் பாஷா, மாலுாரில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஓட்டு எண்ணிக்கையின்போது, பதிவான சில காட்சிகள் காணாமல் போனது தெரிந்தது.நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோலார் கலெக்டர் அக்ரம் பாஷா ஆஜர் ஆனார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், 'சட்டசபை தேர்தல் நடந்தபோதும், ஓட்டு எண்ணிக்கை நடந்தபோதும், முந்தைய மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா பணியில் இருந்தார். பதிவான ஓட்டுகள், கண்காணிப்பு கேமரா காட்சிகள் குறித்து, தற்போதைய கலெக்டரிடம் எந்த தகவலும் இல்லை. கேமராவில் பதிவான சில காட்சிகள் காணாமல் போனது குறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளது' என்றார்.இதையடுத்து, 'கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் காணாமல் போனது குறித்து, முந்தைய கலெக்டர் வெங்கடராஜா நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, அடுத்த மாதம் 10ம் தேதிக்கு நீதிபதி தேவதாஸ் ஒத்திவைத்தார்.வெங்கடராஜா தற்போது குடகு மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருகிறார்.