உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இயற்கையின் மடியில் தவழும் சித்தேஸ்வரா கோவில்

இயற்கையின் மடியில் தவழும் சித்தேஸ்வரா கோவில்

இயற்கையின் மடியில், குடிகொண்டுள்ள சித்தேஸ்வரர் கோவிலுக்கு, பல நுாற்றாண்டு வரலாறு உள்ளது. இன்றைக்கும் கோவில் புதுப்பொலிவுடன் இருப்பது, ஆச்சரியமான விஷயம்.பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, நாட்டை ஆட்சி செய்த பேரரசர்கள் வீர, தீரத்தில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. கலை மற்றும் பக்திக்கு முக்கியத்துவம் அளித்தனர். கலைக்கூடங்கள் கட்டி, கலையை வளர்த்தனர். அதேபோன்று கோவில்களை கட்டி, ஆன்மிகத்தை வளர்த்தனர். இந்த கோவில்கள் இன்றைக்கும், மக்களுக்கு பக்தி உணர்வை ஏற்படுத்துகின்றன.

அற்புத கலை

பாகல்கோட், பீளகியின் தெற்கு பகுதியில் 1.5 கி.மீ., தொலைவில் சித்தலிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 1605ம் ஆண்டில் கல்யாண சாளுக்கியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக, வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. கோவில் அற்புதமான கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது.இதன் முன்பாக நான்கு அலங்கார துாண்கள் கட்டப்பட்டுள்ளன. கோவிலின் உள்வளாகம் விசாலமாக உள்ளது. அக்கம், பக்கத்தில் பார்வதி, வீரபத்ரேஸ்வராவின் சன்னிதிகள் உள்ளன.கோவிலை வலம் வரும் பாதையில் லிங்கங்கள் உள்ளன. இவற்றின் அருகில் லஜ்ஜா கவுரி ஒட்டி நீருற்று உள்ளது. புராதன கலை ஓவியங்கள் பக்தர்களை கவர்கின்றன.

விளக்கு கம்பம்

சித்தேஸ்வரா கோவில் சதுர வடிவில் அமைந்துள்ளது. கோவிலில் வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால், பின்பகுதி குன்றின் மீதுள்ள 12 அடி உயரமான விளக்கு கம்பம் தென்படும். இந்த கம்பத்தை 1589ல் ஹைதர்கானின் அதிகாரி கன்டேராவ் திப்பாஜி கட்டியதாம். இதுகுறித்து கம்பத்தின் கல்வெட்டில் மராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது.கோவிலின் மேற்கு திசையில், 1.5 கி.மீ., துாரத்தில், புராதன கிணறு உள்ளது. இதை கன்டேராய பண்டிதர் என்பவர் கட்டினாராம். கோவிலை சுற்றிலும் ஏராளமான தீர்த்த குளங்களும் உள்ளன.கோவில் பின்புற குன்றின் மீதுள்ள மல்ல சித்தப்பா சன்னிதியும், ஏளுமடமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் ஷிராவண மாதம் சித்தேஸ்வர ரத உற்சவம் மிக சிறப்பாக நடப்பது வழக்கம். இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். நடப்பாண்டு ஆகஸ்ட் 26ல் மிகச்சிறப்பாக ரத உற்சவம் நடந்தது.கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்து பீளகிக்கு அரசு பஸ், தனியார் வாகன வசதி உள்ளது. ரயில் வசதி உள்ளது. கொப்பாலுக்கு வரும் பக்தர்கள், இயற்கையின் மடியில் கட்டப்பட்டுள்ள சித்தேஸ்வர சுவாமியை தரிசிக்க மறக்காதீர்கள்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி