இம்பால்: மணிப்பூரில் மெய்டி - ஹமார் சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்; வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஆண்டு மே மாதம், மெய்டி - கூகி பழங்குடியின சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு மேலாக நடந்த கலவரங்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் மாதம் இங்குள்ள ஜிரிபாம் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றை தடுக்கும் வகையில், இங்குள்ள மெய்டி - ஹமார் சமூகத்தினர் இடையே கடந்த 1ம் தேதி அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அசாம் ரைபிள்ஸ் படை மற்றும் துணை ராணுவப் படையினர் முன்பு இரு சமூகத்தின் பிரதிநிதிகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிலையில், மெய்டி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் லால்பானி கிராமத்தில் புகுந்த ஆயுதமேந்திய போராளிகள் குழு, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். எதிர்தரப்பும் இதற்கு பதிலடி கொடுத்தது. சில வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, லால்பானி கிராமம் மட்டுமின்றி ஜிரிபாம் மாவட்டம் முழுதும் பதற்றம் நிலவுகிறது. மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹமார் சமூகத்தினரால் நடத்தப்பட்டது என கூறப்படுகிறது. இரு சமூகத்தினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், அவரவர் பிரதிநிதிகளிடம் பாதுகாப்புப் படையினர் பேச்சு நடத்தி வருகின்றனர். ஹமார் சமூகத்தினரும் மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் கணிசமாக வசிக்கின்றனர். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கும், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.
'ஒப்பந்தம் செல்லாது'
'ஆக., 1 அன்று மேற்கொள்ளப்பட்ட அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லாது' என, ஹமார் சமூகத்தின் உச்ச அமைப்பான ஹமார் இன்புய் தெரிவித்துள்ளது. இது குறித்து ஹமார்இன்புய் பிரிவின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:ஹமார் தலைமையகத்துக்கு தெரியாமல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எனவே, ஜிரிபாம் மாவட்டத்தில் இருந்த ஹமார் இன்புய் குழு நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளனர். அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்காததால் இந்த ஒப்பந்தம் முறையாக செயல்பட வாய்ப்பில்லை என கருதுகிறோம். இந்த ஒப்பந்தம் செல்லாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.