உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தட்பவெட்ப நிலை மாற்றம் விஷக்காய்ச்சல் அதிகரிப்பு

தட்பவெட்ப நிலை மாற்றம் விஷக்காய்ச்சல் அதிகரிப்பு

பெங்களூரு : 'பெங்களூரில் வானிலை மாற்றத்தால், சிறார்களுக்கு விஷக்காய்ச்சல் அதிகரிக்கிறது. மருத்துவமனையில் சேருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே கவனமாக இருக்க வேண்டும்,' என, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:பெங்களூரில் வெப்ப நிலையில் ஏற்றம், இறக்கம், காற்றுடன் கூடிய மழை, சில நேரங்களில் வெயில் என, தட்பவெட்ப நிலை மாறி, மாறி வருகிறது. இது சிறார்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.முக்கியமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், வெளி நோயாளிகள் பிரிவில், காய்ச்சல் பரிசோதனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவர்களில் சிறார்களே அதிகம்.ஒரு மாதமாக பெங்களூரில், சாதாரண மழை பெய்கிறது. மேகமூட்டமான வானிலை நிலவுகிறது. வெப்ப நிலை குறைந்துள்ளது. சில நேரங்களில் வெயில் தலை காட்டுகிறது. இது போன்று தட்பவெட்ப நிலை மாற்றத்தால், மக்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கிறது. குறிப்பாக சிறார்கள் பாதிப்பு அடைகின்றனர்.இருமல், காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். ஜெயநகர் பொது மருத்துவமனை, கே.சி.ஜெனரல் மருத்துவமனை, விக்டோரியா, வாணி விலாஸ் உட்பட, அரசு மருத்துமனைகளுக்கு தினமும் சராசரியாக 50 பேர் வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.காய்ச்சல் ஏற்பட்டவர்கள், வீட்டில் ஓய்வில் இருப்பது அவசியம். வெளியே நடமாடினால் தொற்று மற்றவருக்கும் பரவும். தும்மும் போது, இருமும் போது நோய்க்கிருமிகள் அருகில் உள்ளவர்களுக்கு பரவும். உடற் சோர்வு, தலைவலி, சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெறுவது நல்லது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ