வரும் 26ல் நடக்கும் லோக்சபா சபாநாயகர் தேர்தலில், தங்கள் கட்சி வேட்பாளரை களமிறக்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. துணை சபாநாயகர் பொறுப்பை கூட்டணி கட்சியினருக்கு விட்டுத் தரவும் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான, 18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ல் துவங்குகிறது. அன்றைய தினம், நீண்ட காலம் எம்.பி.,யாக பதவி வகித்து வரும் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் சுரேஷ், இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i442dmom&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 பதவி பிரமாணம்
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களுக்கு இடைக்கால சபாநாயகர் சுரேஷ், பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். வரும் 26ல் சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் வரை, இடைக்கால சபாநாயகராக சுரேஷ் தொடர்வார். லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையை பெறாவிட்டாலும், தே.ஜ., கூட்டணி பலத்தை பயன்படுத்தி, சபாநாயகர் பதவியை தங்கள் வசமே வைத்துக்கொள்ள, பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இந்த விஷயத்தில், கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தியாகி, “பா.ஜ., நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,” என கூறிவிட்டார்.மற்றொரு கூட்டணி கட்சியான தெலுங்கு தேசமோ, அதிகாரப்பூர்வமாக இதுவரை தங்கள் முடிவை தெரிவிக்கா விட்டாலும், தே.ஜ., கூட்டணியிலிருந்து சபாநாயகர் தேர்வு இருக்க வேண்டுமென்று பொடி வைத்து பேசி வருகிறது.தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ராம் கொம்மா ரெட்டி கூறுகையில், ''சபாநாயகர் வேட்பாளரை கூட்டணி கட்சியினர் ஒன்றாக சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும். ஒருமித்த கருத்து எட்டப்பட்டதும், தெலுங்கு தேசம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்கும்,'' என்றார். ஆலோசனை
வரும் 24ல் பார்லிமென்ட் கூடி, இரண்டு நாட்களுக்கு புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு முடிந்ததும், 26ல் சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. அதனால், புதிய சபாநாயகர் யார் என்பதை இறுதி செய்யும் பொறுப்பை, கட்சியின் மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் வசம், பா.ஜ., தலைமை ஒப்படைத்துஉள்ளது. அவர், இரண்டு நாட்களாக, தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார். நேற்றும் அவரது வீட்டில் ஆலோசனை நடந்தது. சபாநாயகர் பதவியை தாங்களே வைத்துக் கொள்ளும் அதேவேளையில், தே.ஜ., கூட்டணி கட்சிகளில் ஏதாவது ஒன்றுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கும் யோசனையை முன்வைத்து, ராஜ்நாத் சிங் பேச்சு நடத்தி வருகிறார். போட்டிக்கு தயார்
அதேநேரத்தில், எதிர்க்கட்சி முகாமான, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், சபாநாயகர் தேர்தலை கூர்ந்து கவனித்து வருகின்றனர். சபாநாயகர் பதவியில் பா.ஜ.,வைச் சேர்ந்தவர் அமரக்கூடாது என்றும் நினைக்கின்றனர். அதனால் தான், 'சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை நிறுத்தினால், நாங்கள் ஆதரவு அளிக்க தயார்' என, வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். மேலும், துணை சபாநாயகர் பதவி, பார்லிமென்ட் மரபுப்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு தான் விட்டுத்தர வேண்டும். அந்த வகையில், இண்டியா கூட்டணிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க, அரசு தரப்பு முன்வர வேண்டும். இந்த இரண்டில், ஏதாவது ஒன்று நடைபெற வேண்டும்.அப்படியில்லாமல், சபாநாயகர் பதவியில் பா.ஜ.,வும், துணை சபாநாயகர் பதவியில் தே.ஜ., கூட்டணி கட்சியும் அமர முடிவு செய்தால், சபாநாயகர் தேர்தலில் தங்கள் அணி சார்பில் வேட்பாளரை நிறுத்தி, ஒரு கை பார்த்து விடலாம் என்றும் நினைக்கின்றனர். வெற்றி வாய்ப்பு குறைவே என்றாலும், வேட்பாளரை நிறுத்தவதில், இண்டியா கூட்டணியினர் உறுதியாக உள்ளனர்.
வெற்றி யாருக்கு?
அரசியல் சட்டத்தின் 93வது அம்சத்தின் கீழ், லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் விதிமுறைகளின்படி, தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாளான, 25ம் தேதி மதியம் 12:00 மணிக்குள், வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் கட்சிகளின் எம்.பி.,க்கள் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தையும் அளித்தாக வேண்டும் என லோக்சபா செயலகம் கூறிவிட்டது.
சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற, சிம்பிள் மெஜாரிட்டியே போதுமானது. அதாவது, தேர்தல் நடக்கும் நாளன்று சபையில் ஆஜரான எம்.பி.,க்களின் எண்ணிக்கையில், பாதிக்கும் மேற்பட்டவர்களின் ஓட்டுகளை எந்த வேட்பாளர் பெறுகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
முதல் சபாநாயகர்?
இந்த முறை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தால், நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின், தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் சபாநாயகர் என்ற பெருமையை, வெற்றி பெறும் சபாநாயகர் பெறுவார். சுதந்திரத்துக்கு முன், 1927 - 46 வரை, ஆறு முறை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்துள்ளது. சுதந்திரத்துக்கு பின், இதுவரை ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே சபாநாயகர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கடந்த லோக்சபாவுக்கு துணை சபாநாயகரே தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல், எதிர்க்கட்சித் தலைவரும் தேர்வு செய்யப்பட வில்லை.