லக்னோ: பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிழல் உலக தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முக்தார் அன்சாரி, 60, மாரடைப்பால் நேற்று முன்தினம் மரணம் அடைந்ததை தொடர்ந்து, மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஷம் கொடுத்து, முக்தார் அன்சாரி கொல்லப்பட்டதாக அவரது மகன் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தின் காஜிபூரை சேர்ந்தவர் முக்தார் அன்சாரி. ரவுடியாக வாழ்க்கையை துவங்கிய இவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நிழல் உலக தாதாவாக உருவானார். ஆயுள் தண்டனை
உ.பி.,யின் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, அரசியல் வாழ்க்கையை துவக்கிய இவர், ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தார். இவர் மீது, 80க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. கடந்த 2005 முதல் சிறையில் உள்ள முக்தார் அன்சாரிக்கு, போலி துப்பாக்கி உரிமம் வைத்திருந்த வழக்கில் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உ.பி.,யின் பண்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, நேற்று முன்தினம் இரவு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. அவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது.இரவு 8:25 மணிக்கு சுயநினைவு இல்லாத நிலையில், பண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இதை தொடர்ந்து உ.பி., முழுதும் பதற்றம் ஏற்பட்டது. வன்முறை மற்றும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மாநிலம் முழுதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பண்டா, மாவ், காஜிபூர், வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசாருடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். குற்றச்சாட்டு
அன்சாரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்பட்டதாகவும், அவரது மகன் உமர் அன்சாரி மற்றும் சகோதரரும், காஜிபூர் எம்.பி.,யுமான அப்சல் அன்சாரி ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.இது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர்.கடந்த 10 நாட்களுக்கு முன், பாரபங்கி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, சிறையில் உள்ள முக்தர் அன்சாரிக்கு உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்படுவதாகவும், அதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு மனு தாக்கல் செய்தார். கடந்த 26ம் தேதி, வயிற்று வலி காரணமாக முக்தார் அன்சாரி, மருத்துவமனையில் 14 மணி நேரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது திடீர் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றச்சாட்டை போலீசார் திட்டவட்டமாக மறுத்து உள்ளனர்.இந்த மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.முக்தார் அன்சாரி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த அதிகாரியை நியமிக்கும்படி, பண்டா மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதன் அடிப்படையில், எம்.பி., - எம்.எல்.ஏ., சிறப்பு நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் கரிமா சிங்கை விசாரணை அதிகாரியாக நியமித்து, பண்டா தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் பகவான் தாஸ் குப்தா நேற்று உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.