பெங்களூரு : கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான புகார் குறித்து விசாரணை நடத்த, கவர்னர் கெலாட் நேற்று அனுமதி அளித்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையா மனைவி பார்வதிக்கு, 2022ல் 14 மனைகளை, 'மூடா' எனப்படும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் ஒதுக்கியது. விசாரணை கமிஷன்
'அதிகார துஷ்பிரயோகம் செய்து, மனைவிக்கு மனைகளை பெற்றுக் கொடுத்த சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர், கர்நாடக லோக் ஆயுக்தாவில் புகார் கொடுத்தார்.சித்தராமையா அதை மறுத்தார். 'என் மனைவிக்கு அவரது தாய் வீட்டில் இருந்து தானமாக மனைகள் வழங்கப்பட்டன. மைசூரு மேம்பாட்டு ஆணையம் அந்த மனைகளை கையகப்படுத்தி, அதற்கு மாற்றாக வேறு மனைகளை வழங்கியது. அப்போது பா.ஜ., தான் ஆட்சியில் இருந்தது' என விளக்கம் அளித்தார். ஓய்வுபெற்ற நீதிபதி தேசாய் தலைமையில் விசாரணை கமிஷனும் அமைத்து, ஆறு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.ஆபிரகாம், லோக் ஆயுக்தா அமைப்பே தன் புகாரை விசாரிக்க வேண்டும் என விரும்பினார். அப்படி விசாரிக்க, கவர்னரின் அனுமதி தேவை. அனுமதி அளிக்கும்படி கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தார். புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு, ஜூலை 26ல் கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார். அதே நாளில், கவர்னருக்கு தலைமை செயலர் பதில் அனுப்பினார். சட்ட விரோதம்
முதல்வருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம் என்றும், அதை திரும்பப் பெறும்படியும் அமைச்சரவையில் ஆகஸ்ட் 1ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின், சட்ட ஆலோசகர் வாயிலாக கவர்னருக்கு முதல்வர் பதில் அனுப்பினார். இதற்கிடையில், மேலும் இரண்டு பேர், 'மூடா' முறைகேட்டில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அதற்கான ஆவணங்களுடன் கவர்னரிடம் தனித்தனியாக புகார் அளித்தனர்.அந்த மனுக்கள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார். புகார் கொடுத்தவர்களை வரவழைத்து, மேலும் சில ஆவணங்களையும் பெற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து, 'முதல்வர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்துள்ளார்' என, மூன்று புகார்தாரர்களுக்கும் கவர்னரின் செயலர் பிரபு சங்கர் தகவல் அனுப்பினார். தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயலுக்கும் தகவல் தெரிவித்தார்.ஊழல் தடுப்புச் சட்டத்தின் 19வது பிரிவின் கீழ் விசாரணை நடத்த மூவரும் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், 17வது பிரிவின் கீழ் விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்துள்ளார். தனிப்பட்ட நபர்களின் புகார் அடிப்படையில் முதல்வர் மீது விசாரணை நடத்த இந்த சட்ட பிரிவு வழி செய்கிறது. இதன் பேரில், லோக் ஆயுக்தாவில் ஆபிரகாம் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய முடியும். கவர்னர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார். அவரது நடவடிக்கை சட்ட விரோதமானது. அதை கோர்ட்டில் சந்திப்பேன் என முதல்வர் கூறினார். 'முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய மாட்டார். அவருக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்' என அமைச்சர்கள் பேட்டி அளித்துள்ளனர். காங்கிரஸ் மேலிடமும் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மாறாக, 'முறைகேடுக்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்' என, பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தலித் நிலம் அபகரிப்பு
தலித்துகள், சிறுபான்மையினரின் பாதுகாவலராக காங்கிரஸ் காட்டிக் கொள்கிறது. ஆனால், அக்கட்சியின் ஒரு முதல்வர், தலித் குடும்ப நிலத்தை அபகரித்துள்ளார். இது, காங்கிரசின் பாசாங்குத்தனம் மற்றும் வாரிசு அரசியலுக்கு உதாரணம்.- ஜே.பி.நட்டாபா.ஜ., தேசிய தலைவர்
காங்கிரஸ் போராட்டம்
கவர்னரை கண்டித்து கர்நாடகா முழுதும் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.சாலை மறியல் செய்தும், டயர்களை கொளுத்தியும் கோபத்தை வெளிப்படுத்தினர். மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.பெங்களூரில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் போராட்டக்காரர்களை துாக்கிச் சென்றனர்.
கவிழ்க்க சூழ்ச்சி
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை நீக்குவதற்கு சூழ்ச்சி நடக்கிறது. காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் வெற்றியடைந்துள்ளதை, பா.ஜ.,வினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உத்தரகண்ட், டில்லி, ஜார்க்கண்ட் மாநிலங்களில் செய்த சூழ்ச்சியை, கர்நாடகாவிலும் செயல்படுத்த நினைக்கின்றனர். என்னை ராஜினாமா செய்யும்படி கேட்க பா.ஜ.,வுக்கு தகுதி இல்லை. ராஜினாமா செய்ய மாட்டேன்.மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் அமைச்சர்கள் முருகேஷ் நிரானி, சசிகலா ஜொல்லே, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீதும் கவர்னரிடம் ஊழல் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?சித்தராமையாமுதல்வர்