| ADDED : ஜூன் 25, 2024 10:50 PM
மூணாறு : இடுக்கியில் தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் நேற்று மலங்கரை அணை திறக்கப்பட்டது.இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில் நேற்று 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது. நேற்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரியாக 52.2 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக பீர்மேடு தாலுகாவில் 89 மி.மீ., மழை பெய்தது.தாலுகா வாரியாக பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு: தேவிகுளம் 46, உடும்பன்சோலை 35.2, பீர்மேடு 89, இடுக்கி 54.2, தொடுபுழா 36.6 மி.மீ., என பதிவானது.கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அடிமாலி அருகே சீயப்பாறையில் ரோட்டில் மரம் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. தொடுபுழா அருகில் உள்ள மலங்கரை அணையில் நீர்மட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று காலை 8:00 மணிக்கு மூன்று ஷட்டர்கள் தலா 30 செ.மீ., வரை உயர்த்தப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது.பழைய மூணாறில் உள்ள ஹெட் ஒர்க்ஸ் அணையில் அனைத்து ஷட்டர்களும் நேற்று காலை 6:00 மணிக்கு திறக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் மாலை 6:00 மணிக்கு ஒரு ஷட்டர் 10 செ.மீ., உயர்த்தப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது.மூணாறு அருகே மாட்டுபட்டி பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் அணையில் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தடை
மாவட்டத்தில் மழை தொடர்வதால் இரவு 7:00 முதல் காலை 6:00 மணி வரை இரவு நேர பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது.