பா.ஜ., மாஜி அமைச்சர் குறித்து காங்.,-எம்.எல்.ஏ., சர்ச்சை
பெலகாவி : “என்னை பற்றிப் பேசினால், உன்னை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்வேன்,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீலை பற்றி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே அடாவடித்தனமாக பேசினார்.பெலகாவி, காக்வாட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே ஊழலில் ஈடுபடுவதாக, காக்வாட் தொகுதியின் பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் குற்றஞ்சாட்டினார்.இந்நிலையில், காக்வாட்டின் ஜனபுரா கிராமத்தில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் ராஜு காகே பேசுகையில், ''என்னை பற்றி பேச ஸ்ரீமந்த் பாட்டீலுக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் என்ன ஹரிச்சந்திரனா. சர்க்கரை அமைச்சராக இருந்தபோது, அவர் செய்த ஊழல் பற்றி எனக்கு தெரியும். இன்னொரு முறை என்னை பற்றிப் பேசினால், ஸ்ரீமந்த் பாட்டீலை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்வேன்,'' என்றார்.அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவரது பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.'அழகாக இருக்கும் நர்ஸ்கள், என்னை தாத்தா என்று அழைப்பது கவலையாக உள்ளது' என, சில மாதங்களுக்கு முன்பு, ராஜு காகே பேசி சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தததால், தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.