உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவசர வழக்காக விசாரிக்க கோர்ட் மறுப்பு கெஜ்ரிவாலுக்கு தொடரும் சிறைவாசம்

அவசர வழக்காக விசாரிக்க கோர்ட் மறுப்பு கெஜ்ரிவாலுக்கு தொடரும் சிறைவாசம்

புதுடில்லி, மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்து விட்டது. இதையடுத்து, இந்த வார இறுதி வரை அவரது சிறைவாசம் தொடர்வது உறுதியாகி உள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசால் அமல்படுத்தப்பட்ட, மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின், இந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது.இந்த ஊழலில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து தனியாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையினர், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, கடந்த மாதம் 21ல் கைது செய்தனர்.அமலாக்கத் துறையினரின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வரும் 15ம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க, சமீபத்தில், சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது அவர், திஹார் சிறையில் அறை எண் - 2ல் அடைக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன், இந்த விவகாரத்தை, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி எழுப்பினார். அப்போது, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, ''இந்த கோரிக்கையை, 'இ - மெயில்' வாயிலாக தெரிவியுங்கள். நாங்கள் பரிசீலிக்கிறோம்,'' என்றார்.எனினும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கை விசாரிக்க, சிறப்பு அமர்வு நேற்று அமைக்கப்படவில்லை.வியாழக்கிழமையான இன்று ரம்ஜான் விடுமுறை, வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை. இதைத் தொடர்ந்து வார இறுதி விடுமுறை என்பதால், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு, திங்கட்கிழமை அதாவது ஏப்., 15ல், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.அதுவரை அவர் திஹார் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

டில்லி அமைச்சர் ராஜினாமா

ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி சமூக நலத் துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த், நேற்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் அவர் கூறுகையில், ''ஆம் ஆத்மி கழுத்து வரை ஊழல் உள்ளது. ஊழல்வாதிகளுடன் பணியாற்ற முடியாது,'' என்றார்.ஏற்கனவே நெருக்கடியில் சிக்கி உள்ள ஆம் ஆத்மிக்கு, ராஜ் குமார் ஆனந்தின் ராஜினாமா மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kannan
ஏப் 11, 2024 12:33

ஜஸ்டிஸ் சந்திரசூட் முதலில் சிங்க்வி கேஸ் எடுப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுகின்றார் நிறைய வாசக்குகள் நிலுவயில் இருக்கறது கொஞ்சம் பழைய கேஸ் முடிங்க சார்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ