சண்டிகர்: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கை, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.ஹரியானாவின் சிர்சா பகுதியில், தேரா சச்சா சவுதா என்ற சீக்கிய அமைப்பை, பெபர்வா ஷா மஸ்தானா ஜி மஹாராஜ் என்பவர் 1948, ஏப்., 29ல் துவங்கினார். சமூக சீர்திருத்தம் மற்றும் ஆன்மிகத்தில் தனி அடையாளத்துடன் திகழ்ந்து வரும் இந்த அமைப்பை பல்வேறு சீக்கிய மத தலைவர்கள் தலைமை ஏற்று நடத்தினர்.இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக, குர்மீத் ராம் ரஹிம் சிங், 56, உள்ளார். அந்த அமைப்பில் துறவிகளாக இணைந்து பணியாற்றும் பெண்களை இவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 2002ல் புகார் எழுந்தது.இவரது பாலியல் லீலைகளை விலாவரியாக விளக்கி, மொட்டை கடிதாசி ஒன்று அப்போது பரப்பப்பட்டது. தேரா சச்சா சவுதா அமைப்பில் அப்போது பணியாற்றி வந்த அதிகாரி ரஞ்சித் சிங் என்பவர் தான், அந்த கடிதத்தை பரப்பியதாக கூறப்பட்டது. கடந்த 2002ல், ரஞ்சித் சிங், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர் ராம் சந்தர் பிரஜாபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின் 2014ல் சி.பி.ஐ., விசாரணைக்கு எடுத்தது. தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில், அவர் குற்றவாளி என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் 2017ல் உத்தரவிட்டது.அதன் பின் நடந்த கலவரத்தில், ஹரியானாவில் 30 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயம் அடைந்தனர். ராணுவம் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வழக்கில், குர்மீத் ராம் ரஹிம் சிங் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் 2021ல் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹிம் சிங் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ராம் ரஹிம் உட்பட, அனைவரையும் விடுவித்து நேற்று உத்தரவிட்டது.