மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
5 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 hour(s) ago | 2
மும்பை:மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி 41 இடங்களில் வென்றது. தேசியவாத காங்., நான்கு இடங்களிலும், காங்., ஒரு இடத்திலும் வென்றன. அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதல்வர் யார் என்பதில் பிரச்னை எழுந்ததை அடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பா.ஜ., கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று காங்., மற்றும் தேசியவாத காங்.,குடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவி ஏற்றார். தேர்தல் பிரசாரம்
இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில், உத்தவுக்கு நெருக்கமாக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவை உடைத்தார். 40 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் பா.ஜ., கூட்டணியில் இணைந்தார்.ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை உண்மையான சிவசேனா என தேர்தல் கமிஷன் அறிவித்தது. உத்தவ் தலைமையிலான சிவசேனாவுக்கு, சிவசேனா - உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே என பெயரிடப்பட்டது.அதன்பின், அடுத்த அதிரடியாக, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார், அக்கட்சியை உடைத்து வெளியேறி, பா.ஜ.,வுடன் கைகோர்த்து, மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஆனார்.இதனால், உண்மையான தேசியவாத காங்., என்ற அந்தஸ்தை சரத் பவார் கட்சி இழந்தது. உத்தவ் சிவசேனா மற்றும் சரத் பவார் பிரிவு தேசியவாத காங்., சின்னங்களையும் இழந்ததால் தேர்தல் பிரசாரத்தில் பின்னடைவை சந்தித்தன. முன்னிலை
இந்நிலையில், நேற்று வெளியான லோக்சபா தேர்தல் முடிவுகள் உத்தவ் தாக்கரேவுக்கும், சரத் பவாருக்கும் புதிய உற்சாகத்தை அளித்து உள்ளது. இந்த தேர்தலில் சிவசேனா - உத்தவ் பிரிவு 10 இடங்களிலும், தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு ஏழு இடங்களிலும் வெல்லும் நிலையில் உள்ளன. காங்., 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.இதன் வாயிலாக, மஹாராஷ்டிராவில் 'இண்டியா' கூட்டணி 29 இடங்களில் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. கடந்த 2019 உடன் ஒப்பிடுகையில், மஹாராஷ்டிராவில் பா.ஜ., இந்த முறை மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது.பா.ஜ., 11 இடங்களிலும், சிவசேனா ஆறு இடங்களிலும், தேசியவாத காங்., ஒரு இடத்திலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. இதன் வாயிலாக தே.ஜ., கூட்டணி 18 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.மஹாராஷ்டிராவில், சிவசேனா மற்றும் தேசியவாத காங்., கட்சிகளை பா.ஜ., உடைத்ததை மக்கள் விரும்பவில்லை என்பதையே இந்த தேர்தல் உணர்த்துவதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், மும்பையில் உள்ள சிவசேனா உத்தவ் பிரிவு அலுவலக வாயிலில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், 'யார் உண்மையான சேனா என்பதை மக்கள் உணர்த்தி விட்டனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “இது மிகப்பெரிய மாற்றத்துக்கான தேர்தல். இதில் மஹாராஷ்டிர மக்கள் பெரும் பங்காற்றி உள்ளனர். இண்டியா கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்து பேச உள்ளோம்,” என்றார்.
மஹாராஷ்டிராவின் பாராமதி லோக்சபா தொகுதியில் சரத் பவாரின் மகளும், தற்போதைய எம்.பி.,யுமான சுப்ரியா சுலே, 63,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு எதிராக அவரது உறவினரும், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மஹாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா களமிறக்கப்பட்டார். இத்தொகுதிக்கு கடந்த மாதம் 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில், அப்போது பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், சுப்ரியா சுலே வெற்றி பெற்று, பாராமதி தொகுதியை தக்கவைத்தார்.
5 hour(s) ago | 2
11 hour(s) ago
11 hour(s) ago | 2