| ADDED : ஜூன் 14, 2024 02:21 AM
சோனியா விஹார்:“யமுனையில் கூடுதல் தண்ணீரை ஹரியானா அரசு திறந்துவிடாவிட்டால், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது,” என, மாநில ஆம் ஆத்மி அமைச்சர் ஆதிஷி தெரிவித்தார்.முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக கோடை வெப்பத்தை டில்லிவாசிகள் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.ஒருபுறம் வெப்பமும் மறுபுறம் தண்ணீர் தட்டுப்பாடும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில், தெற்கு டில்லிக்கு சோனியா விஹார் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய்களின் நிலை குறித்து நேற்று மாநில அமைச்சர் ஆதிஷி ஆய்வு செய்தார்.அப்போது, குடிநீர் வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.அப்போது, ஆதிஷி கூறுகையில், “டில்லியில் 18,184 கோடி லிட்டர் நீர் உற்பத்தி குறைந்துள்ளது. கூடுதல் தண்ணீரை யமுனையில் ஹரியானா அரசு திறந்து விடாவிட்டால் நகரின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது,” என கூறினார்.இதுகுறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் அமைச்சர் ஆதிஷி, 'டில்லியில் குறைந்த அளவு தண்ணீர் கிடைப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தண்ணீர் வீணாவதை பொறுத்துக் கொள்ள முடியாது' எனக்கூறியுள்ளார்.