கலபுரகி: “பெயரளவில் மட்டுமே ராதாகிருஷ்ணா வேட்பாளர். ஆனால் எனக்கும், மல்லிகார்ஜுன கார்கே இடையில்தான் போட்டியே,” என, பா.ஜ., வேட்பாளர் உமேஷ் ஜாதவ் தெரிவித்தார்.அரசியல் வட்டாரத்தில், 'ஆர்.கே.,' என்றே பிரபலமடைந்தவர் ராதாகிருஷ்ணா. இவர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருமகன். இப்போது முதன் முறையாக, கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.கலபுரகி, சித்தாபுராவின், குன்டகுர்தி கிராமத்தை சேர்ந்த இவர், பி.காம்., பட்டதாரி. பல தேர்தல்களில், தன் மாமனாரின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர். காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு அறிமுகமானவர் என்றாலும், தொகுதி மக்களுக்கு புதுமுகம். இதுவரை எந்த கூட்டத்திலும் உரையாற்றியது இல்லை.இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரி, கர்நாடக கேந்திரிய வித்யாலயா அமைத்தது, ஜெயதேவா மருத்துவமனை, கலபுரகியில் உயர்நீதிமன்றத்தின், கலபுரகி அமர்வு துவங்கியது ஆகியவை காங்கிரசின் சாதனை என, இக்கட்சியினர் கூறுகின்றனர். இது ஓட்டுகளாக மாறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.இதற்கு மாறாக கலபுரகியில் மெகா டெக்ஸ்டைல் பார்க் அமைப்பதாக, பா.ஜ., உறுதி அளித்துள்ளது. இதனால் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும், இரண்டு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என, பா.ஜ., கூறியுள்ளது.கலபுரகியில் இருந்து பெங்களூருக்கு நேரடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இரண்டு நகரங்களுக்கிடையே மற்றொரு சாப்தாஹிக எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை துவங்கிய பெருமை தன்னையே சேரும் என, பா.ஜ., கூறுகிறது. இதனால் மக்களின் ஆதரவு கிடைக்கும் என, அக்கட்சி நம்புகிறது.ஆனால் ஆண்டுதோறும் வறட்சி அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்படும் கலபுரகியில், மக்களை பாதுகாக்க எந்த கட்சிகளும் திட்டம் வகுக்கவில்லை என்ற வருத்தம் மக்களுக்கு உள்ளது.இம்முறை லோக்சபா தேர்தலில், கலபுரகி தொகுதியில் ராதாகிருஷ்ணா, பா.ஜ., சார்பில் உமேஷ் ஜாதவும் களத்தில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே கலபுரகிக்கு வந்து பிரசாரம் செய்தார். வரும் நாட்களில் மீண்டும் அவரை அழைத்துவர, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. எனவே தனக்கே வெற்றி கிடைக்கும் என, உமேஷ் ஜாதவ் நம்புகிறார்.இவர் கூறுகையில், “பெயரளவுக்கு மட்டுமே ராதா கிருஷ்ணா எனக்கு போட்டி வேட்பாளர். ஆனால் உண்மையில் எனக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இடையேதான் போட்டியே,” என்றார்.