வீடுவீடாக வாக்காளர் சரிபார்ப்பு அடுத்த மாதம் பணிகள் துவக்கம்
புதுடில்லி:டில்லி சட்டசபைத் தேர்தலுக்காக, வீடு வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்க்கும் பணிகள் அடுத்த மாதம் துவங்குகிறது.இதுகுறித்து, டில்லி தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு 2025ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி விரைவில் துவங்கப்படுகிறது. என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியம் முழுதும் வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணியை அக்டோபர் மாதம் துவக்குவர்.வாக்காளர் பட்டியலில் ஜனவரி 1, 2025 அன்று தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியோர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்படுவர்.சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் முடிந்து, ஒருங்கிணைந்த பட்டியல் அக்டோபர் 29ம் தேதி வெளியிடப்படும். நவம்பர் 28ம் தேதி வரை ஆட்சேபனைகள் மற்றும் புதிய வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். டிசம்பர் 24ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பரிசீலக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.இறுதி வாக்காளர் பட்டியல் 2025ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிடப்படும்.டில்லி மக்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுடன் ஒத்துழைத்து புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க வேண்டும். முகவரி மாற்றம் இருந்தால் உடனடியாக விண்ணப்பித்து மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல் வாக்காளர் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைக்க வேண்டும். அக்டோபர் 1, 2024 மற்றும் ஜனவரி 1, 2025 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தி அடைந்தோர் படிவம்--6ஐ பூர்த்தி செய்து கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைய வேண்டும்.மேலும், தங்கள் குடும்பத்தில் மரணம் அடைந்தோர் பற்றிய விவரங்களையும் அளித்து அவர்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க உதவ வேண்டும்.கடந்த மே மாதம் டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 1.52 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் தலா 10 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.