இடிந்து விழுந்த சுரங்கப்பாதை தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத்: தெலுங்கானாவில், கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்த விபத்தில், எட்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.தெலுங்கானாவின் நாகர் கர்னுால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்கட்டு பகுதியில் இருந்து, பிற இடங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.வழக்கம் போல் பணியில் ஈடுபட, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் நேற்று சென்றனர். அவர்கள், 12 கி.மீ., துாரம் சென்று பணியில் ஈடுபட்ட நிலையில், சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், எட்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தொழிலாளர்களை மீட்கும் பணியில், சுரங்க நிறுவனமான, சிங்கரேனி கொலியரீஸ் கம்பெனி லிமிடெட் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின், 19 பேர் அடங்கிய குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'இது போன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதில் எங்கள் நிறுவனம் கைதேர்ந்தது. 'ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் போலந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள் உள்ளன. எங்களிடம் மேம்பட்ட கருவிகள் உள்ளன. சில நிமிடங்களில் பெரிய பாறைகளை உடைத்து விடுவோம்' என்றார். இரவு பகலாக மீட்பு பணி தொடர்கிறது.