பெண்களை ஏமாற்றிய போலி ஐ.பி.எஸ்., கைது
கொச்சி :ஐ.பி.எஸ்., அதிகாரி போல் நடித்து பல பெண்களையும், வங்கிகளையும் ஏமாற்றி மோசடி செய்த நபரை கேரள போலீசார் நேற்று கைது செய்தனர். கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வேணுகோபால் என்ற விபின் கார்த்திக், 31. இவர், கேரளாவில் உள்ள பல பகுதிகளுக்கும், கர்நாடகாவின் பெங்களூருக்கும் அடிக்கடி சென்று வந்தார். அவ்வாறு செல்லும் போது, அங்குள்ள பெண்களிடம் தன்னை ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி என அறிமுகம் செய்து, திருமணம் செய்வதாக ஏமாற்றி பல லட்ச ரூபாய்களை சுருட்டிவிட்டு தலைமறைவாவதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பள விபரம் தொடர்பாக போலி ஆவணங்கள் தயாரித்து பல வங்கிகளில் கடன் வாங்கி மோசடியிலும் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் பெங்களூரில் வசித்து வந்த கேரள பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, அவரிடம் இருந்து பணம் மற்றும் வாகனங்களை கார்த்திக் பெற்றார். பின்னர், தனக்கு புற்றுநோய் இருப்பதால் திருமணம் செய்ய இயலாது எனக் கூறி அங்கிருந்து தப்பி கேரளா திரும்பினார். அந்த பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய பெங்களூரு போலீசார், கார்த்திக் கேரளாவில் இருப்பதை அறிந்து, அவரைப் பிடிக்க கேரள போலீசாரின் உதவியை நாடினார். இதையடுத்து, கொச்சி போலீசாரின் உதவியுடன் அவரை நேற்று கைது செய்தனர். கார்த்திக்கிடம் இருந்த மொபைல் போன், லேப் டாப், பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கேரளா மற்றும் பெங்களூரில் இது போல் 13 வழக்குகளில், கார்த்திக் ஏமாற்றி பணமோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.