நிரம்பியது அஞ்சனாபுரா அணை: எம்.பி., - எம்.எல்.ஏ., பூஜை
ஷிவமொகா : ஷிகாரிபுரா மக்களின் உயிர்நாடியான அஞ்சனாபுரா அணை நிரம்பியது. தொகுதி எம்.பி., ராகவேந்திரா, எம்.எல்.ஏ., விஜயேந்திரா, அணைக்கு பூஜை செய்தனர்.மலைப்பகுதி மாவட்டமான ஷிவமொகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஷிகாரிபுராவில் உள்ள அஞ்சனாபுரா அணை நிரம்பியுள்ளது. பொதுவாக ஜூலை இறுதியில் அணை நிரம்புவது வழக்கம். இம்முறை முன் கூட்டியே நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஷிவமொகா தொகுதி பா.ஜ., -- எம்.பி., ராகவேந்திரா, ஷிகாரிபுரா எம்.எல்.ஏ., விஜயேந்திரா, நேற்று முன்தினம் மாலையில் அஞ்சனாபுரா அணைக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.அஞ்சனாபுரா அணை 1.82 டி.எம்.சி., தண்ணீர் சேகரிக்கும் திறன் கொண்ட சிறிய அணையாகும். ஷிகாரிபுரா, ஷிராளகொப்பாவுக்கு இங்கிருந்தே, குடிநீர் வழங்கப்படுகிறது. அணை நிரம்பினால் 16,635 ஏக்கர் பகுதிக்கு தண்ணீர் வழங்கப்படும். அணை நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அஞ்சனாபுரா அணை 1936ல், மைசூரு மஹாராஜா காலத்தில் கட்டியதாகும். துங்கா ஆற்று நீர், ஏற்ற நீர்ப்பாசன திட்டத்தின் மூலம், குமுதவதி ஆற்றில் சேர்க்கப்படும். அங்கிருந்து அஞ்சனாபுரா அணையை அடைகிறது. எடியூரப்பா முதல்வராக இருந்த போது, 199 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்தி, அணைக்கு தண்ணீர் கொண்டு வந்தார். அணை நிரம்பியதை கேள்விப்பட்டு, அதை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றனர்.