உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து ஆண் கருவாக மாற்றுவதாக மோசடி

சட்டவிரோதமாக பாலினம் கண்டறிந்து ஆண் கருவாக மாற்றுவதாக மோசடி

கோலார், கருவின் தன்மையை சட்டவிரோதமாக கண்டறிந்ததுடன், ஆண் சிசுவாக மாற்றுவதாக நுாதன மோசடி செய்த மருத்துவமனை மீது புகார் கூறப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ளது ஆடம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேஷ். இவரது மனைவி அனிதா. தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சட்டவிரோதம்

இந்த நிலையில் அனிதா மீண்டும் கருவுற்றார். இவர்களுக்கு ஆண் குழந்தை வேண்டுமென விரும்பினர். கருவில் இருப்பது என்ன குழந்தை என்பதை தெரிந்து கொள்வதற்காக, மாலுார் நகரின் சஞ்சனா என்ற தனியார் மருத்துவமனைக்கு 'ஸ்கேனிங்' செய்ய மே 6ல், தம்பதி சென்றனர்.ஸ்கேன் செய்த மருத்துவமனை ஊழியர்கள், 'உங்களின் மூன்றாவது குழந்தையும் பெண் தான். கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பினால், நாங்களே செய்கிறோம்' எனக் கூறி பணம் கேட்டனர்.தம்பதி தயங்கினர். அப்போது ஊழியர் ஒருவர் அனிதாவிடம், 'உங்கள் கருவில் உள்ள பெண் குழந்தையை, ஆண் குழந்தையாக மாத்திரை சாப்பிட்டு மாற்ற முடியும்' என, கூறினார். இதை நம்பிய அனிதா, 25,000 ரூபாய் கொடுத்து மாத்திரை வாங்கினார்.இதை கணவருக்குத் தெரியாமல் சாப்பிட்டதில், நேற்று முன்தினம் அவருக்கு மூன்று மாதம், ஐந்து நாட்களாகி இருந்த கரு கலைந்து போனது. அது, ஆண் குழந்தை என்பது தெரிந்தது.சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்ததுடன், ஆண் குழந்தை என்று தெரிந்தும், கருவின் பாலினத்தை மாற்றுவதாக பொய் கூறி பணம் பறித்து மருத்துவமனை ஊழியர்கள் மோசடி செய்து உள்ளனர். இதுகுறித்து, மாலுார் போலீஸ் நிலையத்தில் முருகேஷ் புகார் அளித்தார்.இந்த விவகாரம் குறித்து நேற்று அவர் கூறியதாவது:எங்களுக்கு ஆண் குழந்தை மீது ஆசை இருந்தது. ஆனால், மூன்றாவது பெண் குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை என நினைத்து, கருக்கலைப்புக்கு சம்மதிக்காமல் மருத்துவமனையில் இருந்து வந்து விட்டோம். ஆனால் எனக்கு தெரியாமல், மருத்துவமனை ஊழியர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு என் மனைவிக்கு மாத்திரை கொடுத்துள்ளனர். அதை அவர் சாப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை

இதன் விளைவாக, கர்ப்பத்தில் இருந்த ஆண் கரு கலைந்துவிட்டது. ஆண் குழந்தையை, பெண் குழந்தை என பொய் சொல்லி மோசடி செய்துள்ளனர். மருத்துவமனையில் சட்டவிரோதமாக ஸ்கேனிங் செய்யப்படுகிறது.எனக்கு நடந்த பாதிப்பு வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடமும், தாலுகா அதிகாரியிடமும் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
மே 12, 2024 07:06

எது, மூன்றாவது பெண் குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை என நினைத்து வந்தீர்களா? அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கு உன் மனைவி மாத்திரை வாங்கி சாப்பிட்டது? முதலில் இவனை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும்


Indian
மே 13, 2024 11:06

நண்பரே இங்கே கணவர்களுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் கணவரும் தன்னைத்தானே அறிவாளியென்று நினைத்து செய்யும் பெரும்பாலான செயல்களாலேயே பின்பு அதிக பிரச்சனைகள் ஏற்படுகிறது காரணங்கள் தெரியும்போது அதிகமாக விவாதமாக்கி குடும்பங்களில் பிரிவு வரை செல்கிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை