வினேஷ் போகத்தை கடவுள் தண்டித்தார்: பிரிஜ் பூஷன் ஒலிம்பிக் தோல்வி குறித்து பா.ஜ., பிரமுகர் விமர்சனம்
புதுடில்லி, “ஒலிம்பிக் போட்டியில் ஏமாற்றி இறுதி போட்டி வரை சென்றதற்கு கடவுள் தந்த தண்டனைதான் வினேஷ் போகத்துக்கு கிடைத்த தோல்வி,” என, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும், பா.ஜ., - எம்.பி.,யாகவும் இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது ஆறு மல்யுத்த வீராங்கனையர் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தனர். போராட்டம்
அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, சாக் ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் கடந்த ஆண்டு டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு விளையாட்டு வீரர்கள் களமிறங்கினர். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தை அடுத்து, தலைவர் பதவியை பிரிஜ் பூஷன் ராஜினாமா செய்தார். இதனால், ஆறு முறை எம்.பி.,யாக இருந்த அவருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு நழுவியது. இந்நிலையில், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் இருவரும் காங்கிரஸ் கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தனர். இது குறித்து பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷன் சிங் நேற்று கூறியதாவது:இந்த விளையாட்டு வீரர்கள், கடந்த ஆண்டு எனக்கு எதிரான சதித் திட்டத்தில் ஈடுபட்டனர். இது அரசியல் சதி; இதில், காங்கிரசுக்கு தொடர்பு உள்ளது என அப்போதே கூறினேன். ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, அவர் மகன் தீபேந்தர் ஹூடா ஆகியோர் இதில் ஈடுபட்டு உள்ளனர். சதித் திட்டத்துக்கான முழு திரைக்கதையும் அவர்களால்தான் எழுதப்பட்டது. எனவே, அது விளையாட்டு வீரர்கள் போராட்டம் அல்ல; காங்கிரசின் சதியே என்பது நிரூபணமாகியுள்ளது. திட்டமிட்டே என்மீது அவதுாறு பரப்பப்பட்டது. வினேஷ் போகத்திடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒரு வீரர், ஒரே நாளில் இரண்டு எடைப்பிரிவு போட்டியில் பங்கேற்றது எப்படி? ஒலிம்பிக் போட்டியில் ஏமாற்றியே நீங்கள் இறுதி போட்டி வரை சென்றீர்கள். அதற்காக தான் கடவுள் உங்களை தண்டித்துள்ளார். அதனால் தான், தங்கம் வெல்ல முடியவில்லை. வருத்தம்
விளையாட்டு துறையில் ஹரியானா மாநிலம் இந்தியாவின் கிரீடம். எந்த தகுதி அடிப்படையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பஜ்ரங் புனியா பங்கேற்றார். சோதனைப் போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் அவர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார்.நான் நாட்டின் மகள்களை அவமானப்படுத்தியதாக கூறுகின்றனர். உண்மையில், அவர்களை அவமானப்படுத்தியது, வினேஷும், புனியாவும் தான். அதற்காக அவர்கள் தான் வருத்தப் பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.