உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான ஊழல் வழக்கில் கவிதாவுக்கு... கிடைத்தது ஜாமின்!

மதுபான ஊழல் வழக்கில் கவிதாவுக்கு... கிடைத்தது ஜாமின்!

புதுடில்லி, டில்லி மதுபான ஊழல் வழக்கில், பாரத் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு, ஐந்து மாத சிறைவாசத்துக்குப் பின், ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில், சி.பி.ஐ., மற்றும் ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை விசாரணையின் நேர்மை குறித்து அமர்வு சந்தேகம் எழுப்பியுள்ளது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2021 - 2022 நிதியாண்டில், மதுபான விற்பனை தொடர்பான கலால் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த கொள்கை கைவிடப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் நடந்துள்ள பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரிக்கிறது.

தொடர்பு

இந்த ஊழலில், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. தெலுங்கானா எம்.எல்.சி., எனப்படும் மேலவை உறுப்பினராக உள்ள கவிதா, கடந்த, மார்ச், 15ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது திஹார் சிறையில் உள்ளார். அதே நேரத்தில் டில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா சமீபத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் ஜாமினில் உள்ளனர்.இதற்கிடையே ஜாமின் கேட்டு கவிதா தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம், ஜூலை 1ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்கக் கோரி, கவிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார். அதே நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிட்டார்.அப்போது அமர்வு கூறியதாவது:இந்த வழக்கில் அரசு தரப்பு நியாயமாக நடந்து கொள்ளவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர், அப்ரூவராக மாறி அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளீர்கள்.

நியாயமில்லை

இப்படி போனால், நாளை வேறு யாரையாவது கைது செய்வீர்களா? இவ்வாறு தேடித் தேடி கைது செய்து, யாரை வேண்டுமானால் குற்றவாளியாக மாற்றி விடுவீர்களா? இந்த வழக்கில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை நியாயமான முறையில் நடந்து கொள்ளவில்லை.தகுதியின் அடிப்படையில், கவிதாவுக்கு ஜாமின் வழங்க முடியும். இதற்கு மேலும் எதிர்ப்பு தெரிவித்தால், நாங்கள் கூறிய கருத்துகளை, உத்தரவில் பதிவிட நேரிடும்.இவ்வாறு அமர்வு கூறியது.இதையடுத்து, தன் வாதத்தை நிறுத்திய எஸ்.வி.ராஜு, சற்று அவகாசம் கேட்டார். அதை ஏற்க மறுத்த அமர்வு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.இரண்டு வழக்குகளிலும், தலா 10 லட்சம் ரூபாய் சொந்த ஜாமினில் விடுவித்த அமர்வு, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

அரசியல் விமர்சனம்

தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. கவிதாவுக்கு ஜாமின் கிடைத்தது தொடர்பாக, அங்கு அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை இணையமைச்சருமான பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது:கவிதா சார்பில் இந்த வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். தற்போது கவிதாவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது. அபிஷேக் சிங்வி, தெலுங்கானாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையே குற்றங்களில் உள்ள நட்பு, இதில் வெளிப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு, பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளன. நியாயத்தின் அடிப்படையில்தான், நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது என, அக்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.'தேவையில்லாமல் சிறையில் அடைத்து வைப்பதா?'

புல் அவுட்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின், 45வது பிரிவின்படி, ஜாமின் வழங்குவதில் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவர் உயர் தகுதியை உடையவர் என்பதால், ஜாமின் வழங்க முடியாது என்ற டில்லி உயர் நீதிமன்ற உத்தரவு ஏற்புடையதாக இல்லை. இதுபோன்ற வழக்குகளில், வழக்கின் முக்கியத்துவம், குற்றஞ்சாட்டப்பட்டவரின் தகுதியைப் பார்க்க வேண்டும்.இவர் முன்னாள் எம்.பி., மற்றும் தற்போது மேலவை உறுப்பினராக உள்ளார். அதிகம் படித்தவர், உயர் பதவியில் உள்ளார் என்ற காரணத்துக்காக ஜாமின் மறுப்பதை ஏற்க முடியாது.இந்த வழக்கில் நீதிபதிகள் மேலும், உத்தரவிட்டதாவது:இந்த வழக்கில், விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலும், அவரை காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை. அவர் ஏற்கனவே, ஐந்து மாதங்களாக சிறையில் இருந்துள்ளார்.இந்த இரண்டு வழக்குகளிலும், 493 சாட்சிகள் உள்ளன. மேலும், 50,000 பக்கங்களுக்கு அதிகமான ஆவணங்கள் ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை விசாரிக்க வேண்டியுள்ளதால், தற்போதைக்கு வழக்கு முடிவுக்கு வராது. மணீஷ் சிசோடியா வழக்கில் கூறியதுபோல், தேவையில்லாமல் சிறையில் அடைத்து வைப்பது என்பது ஒரு தண்டனையாக இருக்கக் கூடாது. அதனால், கவிதாவுக்கு ஜாமின் வழங்கப்படுகிறது.பணமோசடி தடுப்புச் சட்டத்தின், 45வது பிரிவின்படி, ஜாமின் வழங்குவதில் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவர் உயர் தகுதியை உடையவர் என்பதால், ஜாமின் வழங்க முடியாது என்ற டில்லி உயர் நீதிமன்ற உத்தரவு ஏற்புடையதாக இல்லை. இவர் முன்னாள் எம்.பி., மற்றும் தற்போது மேலவை உறுப்பினராக உள்ளார். அதிகம் படித்தவர், உயர்பதவியில் உள்ளார் என்ற காரணத்துக்காக ஜாமின் மறுப்பதை ஏற்க முடியாது.தன் மொபைல் போன்களை அடிக்கடி மாற்றியுள்ளார். அதில் உள்ள தகவல்களை அழித்துள்ளார் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது. மொபைல்போன் என்பது ஒருவருடைய தனிப்பட்ட சொத்து. அதில் உள்ள விபரங்களை உங்களிடம் எதற்கு காட்ட வேண்டும். நாங்கள்கூட, எங்கள் மொபைலில் தேவையில்லாத சில விஷயங்களை நீக்குவோம். இது பெரும்பாலும் எல்லாரும் செய்யக் கூடியதுதான். எந்த ஆதாரத்தின் அடிப்படையில், அவர் குற்றம் செய்திருப்பார் என்ற முடிவுக்கு வந்தீர்கள்.அப்ரூவராக மாறியுள்ளவர், அதற்கு முன் அளித்த வாக்குமூலத்தில் கவிதாவின் பெயரைக் கூறவில்லை. ஆனால், அப்ரூவரான பின், கவிதாவின் பெயரைக் கூறியுள்ளார். அப்ரூவரின் வாக்குமூலத்தையும் சரிபார்ப்பது அவசியமாகும். அவர் கூறினார் என்பதற்காகவே, ஒருவரை கைது செய்ய முடியுமா?இந்த விஷயத்தில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணையின் நேர்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுகிறது. நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

புல் அவுட்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின், 45வது பிரிவின்படி, ஜாமின் வழங்குவதில் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவர் உயர் தகுதியை உடையவர் என்பதால், ஜாமின் வழங்க முடியாது என்ற டில்லி உயர் நீதிமன்ற உத்தரவு ஏற்புடையதாக இல்லை. இதுபோன்ற வழக்குகளில், வழக்கின் முக்கியத்துவம், குற்றஞ்சாட்டப்பட்டவரின் தகுதியைப் பார்க்க வேண்டும்.இவர் முன்னாள் எம்.பி., மற்றும் தற்போது மேலவை உறுப்பினராக உள்ளார். அதிகம் படித்தவர், உயர் பதவியில் உள்ளார் என்ற காரணத்துக்காக ஜாமின் மறுப்பதை ஏற்க முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை