கவர்னர் மாளிகை: காங்., இன்று முற்றுகை
பெங்களூரு: 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் தரப்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், முதல்வர், தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக, லோக் ஆயுக்தா போலீசில், சமூக ஆர்வலர் ஆபிரகாம் புகார் அளித்தார்.பின், முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடமும் அவர் புகார் அளித்தார். இதே விவகாரத்தில் முதல்வருக்கு எதிராக ஸ்நேஹமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோரும் கவர்னரிடம் அடுத்தடுத்து புகார் அளித்தனர்.இவற்றை ஏற்றுக்கொண்ட கவர்னர், முதல்வரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்தனர். மாநிலம் முழுதும், கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.இதற்கிடையில், கர்நாடக அமைச்சரவை கூட்டத்திலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திலும், கவர்னருக்கு எதிராக கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தற்போது ஒரு படி மேலே சென்று, கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை, காங்கிரஸ் இன்று நடத்துகிறது. இன்று காலை 11:00 மணியளவில், பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், காங்கிரஸ் தலைவர்கள் திரண்டு போராட்டம் நடத்த உள்ளனர்.அதன்பின், மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில், அங்கிருந்து ஊர்வலமாக சென்று, கவர்னர் மாளிகையை முற்றுகையிட உள்ளனர். இதில், அனைத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், எம்.எல்.சி.,க்களும் தவறாமல் பங்கேற்கும்படி, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இன்று விசாரணை
'மூடா' முறைகேடு வழக்கில், தன் மீது விசாரணைக்கு அனுமதி அளித்த, கவர்னர் முடிவுக்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா, மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது, முதல்வர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம், நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.இன்று காலை 10:30 மணிக்கு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், மீண்டும் விசாரணை நடக்க உள்ளது. அப்போது, கவர்னர் தரப்பில், சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதாட உள்ளார்.