உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடன் வாங்கி தான் அரசியல் செய்கிறேன் அமைச்சர் புகாருக்கு ஜி.டி.தேவகவுடா பதில்

கடன் வாங்கி தான் அரசியல் செய்கிறேன் அமைச்சர் புகாருக்கு ஜி.டி.தேவகவுடா பதில்

மைசூரு, : ''என்னை போன்ற அரசியல்வாதி, கர்நாடகாவில் மட்டுமல்ல; நாட்டிலேயே இல்லை. நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்காது,'' என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு சட்டவிரோதமாக 11 மனைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக மூடாவில், வீட்டுமனை பெற்றுள்ள பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களின் பட்டியலை, நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ் வெளியிட்டார். இதில் ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ஜி.டி.தேவகவுடாவின் பெயரும் உள்ளது.

15 ஏக்கர் நிலம்

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ், 'ஜி.டி.தேவகவுடாவுக்கு, மாதகள்ளியில் ஒரு ஏக்கர் நிலம் வழங்கியுள்ளோம்' என முதல்வர் சித்தராமையாவை, தன் பக்கத்தில் அமர்த்தி கொண்டு கூறியுள்ளார். என்னை போன்ற அரசியல்வாதி, மாநிலத்தில் மட்டுமல்ல, நாட்டிலேயே இல்லை. கடன் வாங்கி அரசியல் செய்கிறேன்.என் அரசியல் வாழ்க்கை, உங்களுக்கு தெரியாது. நான் திருமண மண்டபம், பெட்ரோல் பங்க், பள்ளி, வர்த்தக கட்டடம் எதையும் சம்பாதிக்கவில்லை. என் தந்தை 15 ஏக்கர் நிலம் வாங்கினார். முற்போக்கு விவசாயியாக உழைத்து, என் தந்தையின் நிலத்தின் பக்கத்தில் நிலம் வாங்கினேன்.நான் கடன்காரனாகத்தான் அரசியல் செய்கிறேன். மூடாவின் 90 சதவீதம் நிலம், எனது தொகுதியான சாமுண்டீஸ்வரியில் உள்ளது. கோவிந்தராஜு தலைவராக இருந்த போது, நான் ஜெயலட்சுமிபுரத்தில் வாடகை வீட்டில் இருந்தேன். குலுக்கல் முறையில் எனக்கு 50க்கு 80 அடி மனை வழங்கப்பட்டது. இது தவிர வேறு எந்த மனையும், நான் பெறவில்லை.நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பொறுப்புடன் நடந்திருந்தால், இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. அமைச்சர் அனைத்து விஷயங்களையும், சரியாக ஆய்வு செய்திருக்க வேண்டும். தவறு செய்தவர்களை தண்டித்திருக்க வேண்டும். லே - அவுட்களை மேம்படுத்துவதில், மூடா தோற்றுள்ளது. குடிசைப்பகுதிகளை உருவாக்க முற்பட்டுள்ளது. மூடா லே அவுட்களில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவில்லை.அமைச்சர் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். ஏழு நாட்களில் ஆவணங்களுடன், குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அதை விட்டு விட்டு என்னை போன்ற நேர்மையானவன் மீது, களங்கத்தை சுமத்த முற்பட்டுள்ளனர். மாநிலத்தின் 224 தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்களை பற்றியும், விசாரணை நடத்தி தவறு செய்தோருக்கு தண்டனை தரட்டும்.

நோட்டீஸ்

ஒரு வாரத்துக்குள், நகர வளர்ச்சி துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு நான் நோட்டீஸ் அனுப்புவேன். என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கா விட்டால், நான் சட்டப்போராட்டம் நடத்துவேன். மான நஷ்ட வழக்கு தொடர்வேன்.எம்.எல்.ஏ.,க்களான நாங்கள், குறிப்பிட்ட நபர்களுக்கு வீட்டுமனை தாருங்கள் என, சிபாரிசு கடிதம் கொடுத்திருப்போம். அதற்காக எங்களுக்கே மனை கொடுத்ததாக, குற்றம் சாட்டுவது சரியல்ல. என் தொகுதி தொடர்பாக, நான் இரண்டு கடிதங்கள் எழுதி உள்ளேன். இதைத்தான் நான் வீட்டுமனை பெற்றதாக கூறுகின்றனர். இதை ஆய்வு செய்யாமல் அமைச்சர் பேசியுள்ளார். அமைச்சரின் குளறுபடியால், மூடா ஆணையம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. லே - அவுட்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் பணம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை