செருப்பு வீச்சு ஊர்வலம் உ.பி.,யில் பலத்த பாதுகாப்பு
ஷாஜகான்பூர், உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹோலியையொட்டி, 'ராம் பராத், லாத் ஸாஹேப்' ஆகிய ஊர்வலங்கள் நாளை நடைபெறும்.ஷாஜகான்பூரின் குஞ்சாலாலாவில் இருந்து பூல்மதி கோவில் வரையிலான 'லாத் ஸாஹேப்' ஊர்வலம், 18-ம் நுாற்றாண்டில் இருந்தே ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 'லாத் ஸாஹேப்' என்ற ஆங்கிலேய பிரபுவாக பாவித்து, மாட்டு வண்டியில் அமர வைத்து, வழி நெடுகிலும், அவர் மீது செருப்பு வீசுவர். ஷாஜகான்பூரில், நாளை இரண்டு இடங்களில், 'லாத் ஸாஹேப்' ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி, 1,500க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஊர்வல பாதையில் 350 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. வழியில் இருக்கும் 20 மசூதிகள், தார்ப்பாயால் மூடப்பட்டன; மசூதிகளின் அருகே தடுப்புகள் போடப்பட்டன.முன்னெச்சரிக்கையாக, 2,423 பேர் கைது செய்யப்பட்டனர். ஊர்வலத்தில் வீசப்படும் செருப்புகளை அள்ள, லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த பாரம்பரிய விழா தொடர்பாக, சுவாமி சுக்தேவானந்த் கல்லுாரியின் வரலாற்று ஆய்வு பேராசிரியர் விகாஷ் குரானா கூறுகையில், “கி.பி., 1728-ல், பருக்காபாத் சென்றிருந்த நவாப் அப்துல்லா கான், ஹோலி தினத்தன்று ஷாஜகான்பூர் திரும்பினார். “அப்போது, உள்ளூர் மக்களுடன் அவர் ஹோலி கொண்டாடியது, பாரம்பரிய விழாவாக மாறியது; 1930-ல் ஒட்டக வண்டிகளை பயன்படுத்தினர். காலப்போக்கில் விழாவின் வடிவம் மாறிவிட்டது,” என்றார்.