உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரவிந்த் கெஜ்ரிவாலை போல் விடுவிக்க ஹேமந்த் சோரன் கோர்ட்டில் கோரிக்கை

அரவிந்த் கெஜ்ரிவாலை போல் விடுவிக்க ஹேமந்த் சோரன் கோர்ட்டில் கோரிக்கை

புதுடில்லி, தேர்தல் பிரசாரம் செய்வதற்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதுபோல், தனக்கும் அளிக்க வேண்டும் என, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், ஜன., 31ல் கைது செய்யப்பட்டார். நிலமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார்.மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், சமீபத்தில் நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஹேமந்த் சோரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை, கோடை விடுமுறைக்குப் பின் விசாரிப்பதாக அமர்வு கூறியது. அவசரமாக விசாரிக்கும்படி, ஹேமந்த் சோரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கூறினார். வரும், 20ம் தேதிக்குப் பின் விசாரிப்பதாக அமர்வு கூறியது. ஆனால், அதற்கு முன் அவசரமாக விசாரிக்கும்படி, கபில் சிபில் வலியுறுத்தினார்.தேர்தல்கள் முடிந்துவிடும் என்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் அல்லது மனுவை தள்ளுபடி செய்யும்படி அவர் வாதிட்டார். அப்போது, டில்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். அதுபோல, ஹேமந்த் சோரனுக்கும் இடைக்கால ஜாமின் வழங்கும்படி அவர் வாதிட்டார்.இதையடுத்து, வழக்கின் விசாரணையை, 17ம் தேதிக்கு அமர்வு ஒத்திவைத்தது. அதற்குள் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி

டில்லி மதுபான ஊழல் வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக, ஜூன் 1ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால், முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க உத்தரவிடக் கோரி, காந்த் பட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு, 'கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோருவதற்கு உங்களுக்கு சட்டப்படி என்ன உரிமை உள்ளது. இதுபோன்ற விவகாரங்களை டில்லி துணை நிலை கவர்னர் தான் கையாள வேண்டும்' என கூறி, இந்த மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக டில்லி உயர் நீதிமன்றத்தில் இவர் மனு தாக்கல் செய்யாத நிலையில், அதன் தீர்ப்பை எதிர்த்து எப்படி மேல்முறையீடு செய்ய முடியும் என, அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ