உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவசர அவசரமாக முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

அவசர அவசரமாக முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்

ராஞ்சி, நில மோசடி வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன், ஐந்து மாத இடைவெளிக்குப் பின், ஜார்க்கண்ட் முதல்வராக நேற்று அவசர அவசரமாக பதவியேற்றார்.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்த இவர், ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்ததாக புகார் எழுந்தது.அதில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்ததாக கூறி, அமலாக்கத் துறை அவரை ஜனவரி மாதம் கைது செய்தது.இதையடுத்து தன் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அவரது நம்பிக்கைக்குரியவரும், கட்சியின் மூத்த தலைவருமான சம்பய் சோரன் முதல்வராக்கப்பட்டார்.நில மோசடி வழக்கில் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு, உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜார்க்கண்டில் 81 தொகுதிகள் உள்ள சட்ட சபைக்கு, இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் ஆகியவை இணைந்து, 47 இடங்களில் வென்றன. தனித்து போட்டியிட்ட பா.ஜ., 25 இடங்களில் வென்றது.சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடப்பதால், மக்களிடையே அதிகம் பிரபலமில்லாத சம்பய் சோரன் தலைமையில் அதை சந்திக்க கூட்டணி கட்சிகள் விரும்பவில்லை. இதையடுத்து, ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியை ஏற்கும்படி வலியுறுத்தின.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல். ஏ.,க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தான் அவமானப்படுத்தப்படுவதாக சம்பய் சோரன் அதிருப்தியை தெரிவித்தார்.ஆனால், கட்சியின் பெரும்பாலானோர் மற்றும் கூட்டணி கட்சிகளின் விருப்பத்தை ஏற்று, முதல்வர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.இதைத் தொடர்ந்து, வரும் 7ம் தேதி ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், நேற்று மாலையே ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மற்ற அமைச்சர்கள், நாளை மறுதினம் பதவியேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் குழப்பம் ஏற்படுவதை தடுக்க, இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை