உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனமழையால் இடிந்தது வீடு; ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

கனமழையால் இடிந்தது வீடு; ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

பெங்களூரு : உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டம், உல்லாலின் முன்னுார் கிராமத்தை சேர்ந்த அபுபக்கர் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின் சுற்றுச்சுவர், நேற்று அதிகாலை, பக்கத்து வீட்டில் வசித்து வந்த யாசிர் என்பவரின் வீட்டின் மீது இடிந்து விழுந்தது.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின், இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த யாசிர், 45, அவரது மனைவி மரியம், 40, மகள்கள் ரிபா, 17, ஆகியோர் உடலை வெளியே எடுத்தனர். அதன்பின் வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி, ரியானா, 11 என்ற சிறுமியின் உடலை வெளியே எடுத்தனர்.பக்ரீத் பண்டிகைக்காக கேரளாவில் கணவர் வீட்டில் இருந்து வந்திருந்த மூத்த மகள் ரஷீனா, நேற்று முன்தினம் தான் மீண்டும் கணவர் வீட்டுக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.மங்களூரு துறைமுகத்தில் உள்ள ஆயில் நிறுவனத்தில் யாசிர் பணியாற்றி வந்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்த வீட்டை வாங்கிய யாசிர், முதலில் வீட்டை வாடகைக்குதான் விட்டிருந்தார். ஆறு மாதங்களுக்கு முன்புதான், இந்த வீட்டில் குடும்பத்துடன் குடியேறினார். இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டவர்கள் கூறியதாவது:அதிகாலை பயங்கர சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது, வீட்டின் மீது சுவர் விழுந்திருந்தது. உள்ளே இருந்தவர்கைள மீட்க சென்ற போது, சிலருக்கு லேசான மின்சாரம் தாக்கியது. அப்போது, மின்சார ஒயரில் மழைநீர் கசிந்தது தெரியவந்தது.எங்களுடன் இருந்து எலக்ட்ரிஷியன், மின் இணைப்பை துண்டித்தார். பின், ஒரு அறையில் இருந்த மூவரின் உடலை பல மணி நேரம் போராடி மீட்டோம். மற்றொரு அறையில் இருந்த சிறுமியின் கை அசைவதை பார்த்தோம்.அவரையும் மீட்டோம். மழையால் சாலைகள் மோசமாக இருப்பதால், தாமதமாக ஆம்புலன்ஸ் வந்தது. ஆனாலும், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் கூட, இப்பகுதியில் அதே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் பலி ஏற்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.சம்பவ இடத்தை பார்வையிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், சபாநாயகருமான காதர் கூறியதாவது:இச்சம்பவம் வேதனை அளிக்கிறது. இயற்கை பேரிடர், நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. இது அனைத்தும் கடவுளின் செயல். வரும் நாட்களில் இதுபோன்று நடக்காத வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அரசிடம் இருந்து தேவையான உதவிகளை செய்யுமாறு வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவிடம் கூறியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை