| ADDED : ஏப் 30, 2024 10:31 PM
குமாரசாமி லே - அவுட்: குடும்ப பிரச்னையால் விவாகரத்து செய்ய தயாரான மனைவியை, கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு, இலியாஸ் நகரை சேர்ந்தவர் நுாருல்லா, 45; இவரது மனைவி ஷியாபத் உன்னிசா, 38. சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில மாதங்களாக தம்பதி இடையே குடும்ப பிரச்னை காரணமாக மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். இதனால், தான் விவாகரத்து பெறப் போவதாக ஷியாபத் உன்னிசா அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆறு நாட்களுக்கு முன், மீண்டும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.இதனால் கோபமடைந்த நுாருல்லா, வீட்டை விட்டு வெளியேறினார். ஐந்து நாட்களாக கணவன் வீட்டுக்கு வராததால், வீட்டை காலி செய்ய நேற்று முன்தினம் ஷியாபத் உன்னிசா தயாரானார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர், நுாருல்லாவுக்கு தகவல் கொடுத்தனர். அன்று இரவு 7:30 மணிக்கு அங்கு வந்த நுாருல்லா, மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.இருவருக்கும் வாய்தகராறு முற்றியதில் கோபமடைந்த நுாருல்லா, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். தகவல் அறிந்த குமாரசாமி லே - அவுட் போலீசார், உன்னிசாவின் உடலை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நுாருல்லாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.