தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பு
பெங்களூரு: பெங்களூரு நகரில் தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஜாலஹள்ளியில் விமானப்படை அதிகாரியின் வீட்டுக்கு வந்த மூதாட்டியை, 10க்கும் அதிகமான தெரு நாய்கள் கடித்ததில் அவர் உயிரிழந்தார்.அந்த நாய்களை பிடித்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள், தடுப்பூசி போட்டு விட்டு, மீண்டும் அங்கேயே விட்டனர்.இதற்கிடையில், சாலை பள்ளங்கள் மூடும் பணிகளை ஆய்வு செய்த, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் நேற்று முன்தினம் சஹகார்நகர் சென்றார்.அப்போது, அதிக எண்ணிக்கையில் தெரு நாய்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவற்றை கட்டுப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தெரு நாய் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் கோபம் வெளிப்படுத்தினர்.இதற்கிடையில், தெரு நாய்கள் கடியால் பாதிக்கப்படுவோருக்கு, மாநகராட்சி கால்நடை பிரிவு சார்பில், உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரு நாய் கடித்தால், 63648 93322 என்ற மொபைல் எண் அல்லது 1533 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. நாய்களின் உற்பத்தியை தடுப்பது, நோய் பரவல் தடுக்கும் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துவதற்கும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.நகரின் அனைத்து மண்டலங்களில் இருக்கும் தெரு நாய்கள் கட்டுப்படுத்தும் மையங்களை நிர்வகிக்க, 1.77 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.