விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மருக்கு கடத்தப்பட்டு, அங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.வறுமை காரணமாக வெளிநாடு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என, நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் பலர் விரும்புகின்றனர். கை நிறைய சம்பளம் என்று சொன்னதும், பாதுகாப்பு குறித்து எந்தவித யோசனையோ, புரிதலோ இல்லாமல் பொறியில் சிக்கிய எலியாக அவர்கள் மாறி வருவது தொடர்கதையாக உள்ளது. ஆந்திராவின் கடலோர நகரமான விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், அவ்வாறு மியான்மரில் சிக்கி, சைபர் க்ரைம் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'ஆடம்' என்ற குறியீடு வார்த்தையுடன் விசாகப்பட்டினத்தில் உலா வரும் ஏஜென்டுகள், வெளிநாடு செல்ல விரும்பும் இளைஞர்களை குறிவைத்து, தாய்லாந்தில் மாதம் 70,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை இருப்பதாக கூறி, அவர்களை அழைத்துச் செல்கின்றனர். அங்கு மேசோட் உள்ளிட்ட எல்லை பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மியான்மரில் செயல்படும் மோசடி கும்பலுக்கு தலா மூன்று லட்ச ரூபாய்க்கு அவர்களை விற்று விடுகின்றனர். அவ்வாறு நாடு கடத்தப்பட்ட இளைஞர்கள் சைபர் குற்றங்களில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக ஏ.ஐ., டீப்பேக் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நாளில் இத்தனை நபர்களை ஏமாற்றி பணம் வசூலிக்க வேண்டும் என்ற இலக்குகளும், கடத்தப்பட்ட இளைஞர்களுக்கு நிர்ணயிக்கப்படுகின்றன. இலக்கை எட்டாதவர்களுக்கு சித்ரவதைகளும், தண்டனைகளும் பரிசாக அளிக்கப்படுகின்றன. சில சமயத்தில் உணவு கூட வழங்கப்படுவதில்லை என அங்கிருந்து தப்பி வந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பறிக்கப்பட்டதால், வேறு வழியின்றி மோசடியில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். முதற்கட்டமாக, ஆந்திராவில் செயல்படும் ரகசிய ஏஜென்டுகளை கண்காணித்து களையெடுத்து வருகிறோம். நாடு கடத்தப்பட்ட இளைஞர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர், இந்த சைபர் க்ரைம் மோசடி கும்பலில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. பெரும் சவாலான இந்த பிரச்னையை தீர்க்க மியான்மர் அரசுடன் சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சு நடத்தி வருகின்றன.